குடிநீர் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளது முக்கிய ரெயில்வே சந்திப்பு, மாவட்ட அரசு தலைைம ஆஸ்பத்திரி, ஏராளமான பள்ளி, கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

அவர்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பழவேலி நீர் ஏற்றும் தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாததை கண்டித்தும் செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரும் 9-வார்டு கவுன்சிலருமான தமிழரசன் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகையுடன் அமர்ந்து இருந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் தமிழரசன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post குடிநீர் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: