புரிதல், விட்டுக்கொடுப்பது, சகிப்புத்தன்மை இல்லாததால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்: நிபுணர்கள் ஆலோசனை

‘திருமணம் ஆயிரம் காலத்து பயிர்’. ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’. ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ போன்ற பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். இவை பழமொழிகள் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை. அந்த காலகட்டத்தில் காதல் திருமணங்கள் மிக மிக குறைவு. குடும்பத்தில் உள்ள இளம்பெண் மற்றும் வாலிபருக்கு பெரியோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் கணவன், மனைவிக்குள் ஏதாவது பிரச்னை என்றால், இரு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பேசி அதனை சரி செய்வது வழக்கம். காலப்போக்கில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெண்களும் கல்வி கற்க தொடங்கினர். அதன் பின்பு நாகரிக வளர்ச்சியின் காரணமாக அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக குடும்ப வருமானத்திற்கு ஆண்களை மட்டுமே நம்பிய பெண்கள், சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு குடும்பத்தில் அவர்களது கையும் ஓங்கியது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பல பெண்கள் தங்களது குடும்ப வளர்ச்சிக்கு தங்களது வருமானத்தை பயன்படுத்திக் கொண்டனர். மேலும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் தங்களது வருமானத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு சில குடும்பங்களில் பெண்களின் பங்களிப்பை அந்த குடும்பத்தில் உள்ள நபர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் மூலம் பிரச்னைகள் வர ஆரம்பித்தன. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என சில குடும்பங்களில் சொல்லத் தொடங்கினர்.

குறிப்பாக, தற்போதும் பெண் நன்றாக படித்து இருந்தால் போதும் வேலைக்கு செல்லக்கூடாது, என கூறும் பலர் உள்ளனர். அதற்கு காரணம் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களை மதிக்க மாட்டார்கள் என்ற ஒரு தவறான சிந்தனையை பலர் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். நான் சம்பாதிக்கிறேன். என்னால் சுயமாக குடும்பத்தை காப்பாற்ற முடியும். என்னை என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும், என பெண்களும் நினைக்கத் தொடங்கி விட்டனர். இதன் வாயிலாக கருத்து மோதல்களும், குடும்பத்தில் யார் பெரிய ஆள் என்ற தற்பெருமைகளும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு தற்போது ஆண்டுதோறும் விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.

ஒரு காலகட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த கணவன், மனைவி பிரிவு என்ற ஒரு செயல் தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. திருமணம் முடிந்து ஒரு வாரத்தில், இவள் எனக்கு சரிப்பட்டு வர மாட்டாள், என ஆண்களும், இவனுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது என பெண்களும் முடிவு எடுத்து விடுகின்றனர். அந்த முடிவுக்கு ஒரு வருடம் காத்திருந்து விவாகரத்து பெற்று செல்கின்றனர். ஆணும், பெண்ணும் முடிவு எடுத்து விட்டால் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டாம், என தற்போது நீதிமன்றமும் அவர்களுக்கு ஏற்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் எளிதாக விவாகரத்து பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கை துணையை துண்டித்து விடுகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 5,991 விவாகரத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வருடம் சென்ற வாரம் வரை 1,985 வழக்கைகள் பதிவாகியுள்ளன. இது சென்னையில் மட்டும் பதிவான வழக்குகள். இதுபோக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகின்றன. பெண்கள் படித்ததால் தான் பிரச்னை. பெண்கள் வேலைக்கு செல்வதால் தான் பிரச்னை, என ஆண்கள் வீட்டிலும், எனது பெண்ணிற்கு அந்த வீட்டில் நிம்மதி இல்லை. எனது பெண்ணை சமைக்க சொல்கின்றனர், வீட்டு வேலை செய்ய சொல்கின்றனர், அடிமை போல நடத்துகின்றனர் என பெண்கள் வீட்டிலும் விவாகரத்துக்கான காரணத்தை சொல்கின்றனர்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிகரிக்கும் விவாகரத்திற்கு காதல் திருமணமே காரணம் என ஒரு கருத்தையும் வெளியிட்டு இருந்தது விவாகரத்து தொடர்பாக ஒரு பொதுநல வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘நாடு முழுவதும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் காதல் திருமணங்கள் செய்து கொண்டவர்களால் தான் பதிவு செய்யப்படுகிறது. அவர்களிடம் போதிய புரிதல் அனுபவம் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி வரும்போது தம்பதிகள் இருவருக்கும் சமரசம் ஏற்படும் விதமாக கால அவகாசம் கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அதிலும் சாதகமான ஒன்று நடக்கிறதா என்றால் கிடையாது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

இவ்வாறு காதல் திருமணங்களால் தான் விவாகரத்து அதிகம் நடக்கிறது, என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக அமைந்தது. இது ஒருபுறம் இருக்க, தற்போது அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத்துறை தலைவரும் பேராசிரியருமான டாக்டர் அலெக்சாண்டர் ஞானதுரை கூறியதாவது: முந்தைய காலகட்டத்தில் பெண்கள் வலிமையில்லாத ஒரு பத்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கான உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. தற்போது பெண்கள் அனைவரும் படித்து, நல்ல பதவி, பணம் சம்பாதிக்கும் திறனை பெற்றுள்ளனர். தற்போது கணவன் மனைவி இடையே ஏதாவது ஒரு பிரச்னை என்றால் தைரியமாக விவாகரத்துக்கு பெண்கள் தயாராகி விடுகின்றனர். ஏனென்றால் கணவரைச் சார்ந்து அவர்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

எப்போது பெண்கள் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்களோ, அப்போதில் இருந்து அவர்களது திருமணத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். திருமணங்களை பொறுத்தவரை படித்த பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளனர். மேலை நாடுகளிலும் காதல் திருமணங்களை மட்டுமே அனைவரும் வரவேற்கின்றனர். காதல் திருமணத்திற்கு முன்பே ட்ரையல் மேரேஜ். டேட்டிங் போன்ற விஷயங்களை கையாளுகின்றனர். இதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும், என அவர்கள் நம்புகின்றனர். நமது சொசைட்டியில் தற்போது தான் அந்த நிலைக்கு வந்துள்ளனர். முன்பெல்லாம் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெண்கள் பல இடங்களில் அடங்கி சென்றார்கள். ஆனால் தற்போது அந்த நிலையை பெண்கள் எடுப்பது கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவாகரத்து பெற்றுவிட்டால் அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது, என நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்போது அப்படி கிடையாது. அவர்கள் அடுத்த வாழ்க்கைக்கு தயாராகி விடுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெறுவதை தடுக்க, திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் மனநல கவுன்சிலிங் செல்ல வேண்டியது அவசியம். விவாகரத்தை பொருத்தவரை தற்போது உள்ள சூழ்நிலையில், பணம் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு பெண்ணோ, ஒரு ஆணோ தன்னிடம் அதிகமாக பணம் உள்ளது. வேறு யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை வரும் போது, அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிகவும் சுதந்திரமாக சிந்தித்து விவாகரத்து முடிவை எடுத்து விடுகின்றனர்.

ஒருவர் மற்றொருவரை சார்ந்து வாழ வேண்டும் என்ற நிலை இருந்தபோது விவாகரத்து வழக்குகள் மிகவும் குறைந்து இருந்தன. தற்போது விவாகரத்து வழக்குகள் அதிகரித்ததற்கு பணம், சுதந்திர மனப்பான்மை மற்றும் சகிப்பு தன்மை, விட்டு கொடுத்தல் இல்லாமை காரணமாக அமைகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் விவாகரத்து நோக்கி செல்லும் கணவன், மனைவிக்குள் மன ரீதியான பிரச்னைகள் நிறைய உள்ளது. அவர்கள் மனநல மருத்துவரை அணுகி நல்ல தீர்வை காண வேண்டும். அதன்பின்பும் ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்தை நோக்கி அவர்கள் செல்லலாம். ஆனால் எடுத்த உடனே விவாகரத்து என்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராதா பாண்டியன் கூறுகையில், ‘‘தற்போது விவாகரத்திற்கு வரும் ஆண்கள், பெண்கள் இருவரையும் பார்க்கும் போது, அவர்கள் கல்வியில் நன்கு சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர். மதிப்பெண்களை மட்டுமே அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது அவர்கள் பேசும்போது நன்றாக தெரிகிறது. ஆனால் மதிப்பெண்களை வைத்து பெறப்படும் கல்வியின் மூலம் எது போன்ற ஒரு அறிவை அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது நன்றாகவே தெரிய வருகிறது.

ஆண் பெண் என இருவரும் தற்போது உள்ள சூழ்நிலையில் தனி மனிதனின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையில் உள்ளார்கள். ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை தற்போது உள்ள இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கல்வி முறை தற்போதுள்ள இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது. பிரச்னை என்பது அனைவர் வீட்டிலும் உள்ளது. அதை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* வாழ்வியல் கல்வி
தற்போதுள்ள கல்வி முறையில் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விதமான கல்வியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். மரியாதை தருதல். புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை சிறுவயதிலிருந்து கல்வி மூலம் தருவதன் மூலம் மாணவர்கள் படித்து வேலைக்கு சென்று அவர்கள் வாழ்வியல் நடைமுறைக்கு வரும் போது அந்த கல்வி முறை அவர்களுக்கு குடும்பம் நடத்துவதற்கு ஏற்ற வகையில் இருக்கும்.

* 2 சதவீதம் பேர் மன மாற்றம்
வாழ்க்கை பற்றி சரியான புரிதலும், அடுத்தவர்களின் உணர்வுகளை எப்படி மதிப்பது என்ற ஒரு தெளிவு தற்போதுள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருந்தால் அவர்கள் விவாகரத்து வரை வர மாட்டார்கள். பல்வேறு பிரச்னைகளால் நீதிமன்றத்திற்கு வரும் கணவன், மனைவிக்கு நீதிமன்றங்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. தற்போது ஆலோசனை தருபவர்கள் நல்ல முறையில் தருகிறார்கள். ஆனால் தற்போது கவுன்சிலிங் தருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும். மேலும் சிறந்த நிபுணர்களைக் கொண்டு விவாகரத்துக்கு வரும் நபர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலிங் வரும் விவாகரத்து வழக்குகளில் 100 பேர் வருகிறார்கள், என்றால் 20 பேர் கவுன்சிலிங் சென்று தங்களது மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் வாழ சென்று விடுகின்றனர்.

* கவுன்சலிங் அவசியம்
திருமணம் நிச்சயிக்கப்பட்டு அல்லது காதல் செய்யும் போது அவர்களுக்குள் பிரச்னைகள் ஏற்பட்டால் இது போன்ற மனநல கவுன்சிலிங் செல்லும்போது இருவருக்கும் எது போன்ற விஷயங்களில் பிரச்னை ஏற்படுகிறது, எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதை முன்கூட்டியே மருத்துவர்கள் கண்டுபிடித்து அதனை அவர்களிடம் தெரிவிப்பார்கள். இதன் மூலம் அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குள் ஒத்து வருமா அல்லது பிரச்னை ஏற்படுமா என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ற வகையில் அவர்கள் தங்களது முடிவை எடுப்பார்கள்.

* சந்தேக நோய்
தற்போது ஆண், பெண் இருவருக்குமே சந்தேக எண்ணம் அதிக அளவில் வருகிறது. இதனை சந்தேக நோய்கள் எனவும் மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். அவர்களும் மனநல மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை பெற வேண்டும். தற்போது காதல் திருமணங்களில் அதிக விவாகரத்து வருகிறது, என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலும் அதிகமாக விவாகரத்து சம்பவங்கள் வருகின்றன.

The post புரிதல், விட்டுக்கொடுப்பது, சகிப்புத்தன்மை இல்லாததால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்: நிபுணர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: