ரிசர்வ் வங்கியின் ‘திடீர்’ தடையால் ஏடிஎம்களில் குவியும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள்

நெல்லை: ரிசர்வ் வங்கியின் திடீர் தடையால் ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் குவிந்து வருகின்றன. நேற்று முன்தினம் தடை அறிவிக்கப்பட்ட நிலையில் ஏடிஎம்களில் பணம் செலுத்தும் இயந்திரத்தின் மூலம் பலரும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு நவ.8ம் தேதி திடீரென நடப்பில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இந்தத் திடீர் நடவடிக்கையால் மக்களிடம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கி வாயிலில் நெடுநேரம் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக காத்துக் கிடந்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டினர். இந்த நடவடிக்கையால் பண முதலைகள் குறுக்கு வழியில் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அதிகாரிகள் உதவியுடன் காசாக்கிக் கொண்டனர். இதனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள்தான் சிரமங்களை அனுபவித்தனரே தவிர கருப்பு பணம் ஒழியவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அப்போது ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.500 நோட்டுக்கள் மட்டுமே புதிதாக அச்சிடப்பட்டன. ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்து சுமார் 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கம் கடந்த 2 ஆண்டுகளாகவே ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் பல லட்சம் ரூபாயை வெளி பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதால் பலர் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை பதுக்கத் தொடங்கினர். லஞ்சம், வருமான வரித் துறை ரெய்டு போன்ற சமயங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் அதிகம் பிடிபட்டன.

இந்நிலையில் திடீரென ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாகவும், செப்.30க்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும், தினமும் ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் எனுவும் ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில், ரூ.2 ஆயிரத்தை இருப்பு வைத்திருக்கும் பலரும் ஏடிஎம்களில் செலுத்த நேற்று குவிந்தனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் கட்டு கட்டுகளாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்தினார். அப்போது ஏடிஎம்மில் ரூ.38 ஆயிரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் பல ஏடிஎம்களிலும் 2 ஆயிரம் நோட்டுக்களை பணமாக்க பலரும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் உள்ள ஏடிஎம்களில் குவிந்தனர். இதனால் ஏடிஎம்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

செல்லாது என்ற பயம் ஒரு புறம், ஒரே நேரத்தில் 10 நோட்டுக்களை மட்டுமே வங்கியில் செலுத்த முடியும் என்ற அச்சம் மறுபுறம், ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சந்தித்த கஷ்டங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என்ற கவலை என ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் இருப்பு வைத்திருப்போர் அவசர, அவசரமாக ஏடிஎம்களில் பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் பலரது வங்கி கணக்குகளிலும், டெபாசிட் தொகை உயர்ந்து வருகிறது.

The post ரிசர்வ் வங்கியின் ‘திடீர்’ தடையால் ஏடிஎம்களில் குவியும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: