செங்கல்பட்டில் 271 தனியார் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

செங்கல்பட்டு, மே 21:செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று முன்தினம் 271 தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளின் வாகனங்களையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தர ஆய்வு நடத்தி சான்று வழங்கி வருகின்றனர். இந்த கல்வியாண்டு துவக்கத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஒரு தனியார் பள்ளி மைதானத்தில், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளை சேர்ந்த 52 தனியார் பள்ளிகளில் உள்ள 271 வாகனங்கள் தர பரிசோதனை செய்யப்பட்டது. அவசரகால வழி, தீ அணைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் காலாவதியாகாமல் உள்ளதா?, பிரேக் உள்பட பல்வேறு பாகங்கள் முறையாக செயல்படுகிறதா? ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் இப்ராகிம், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன், ஆய்வாளர் ஹமிதா பானு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளி வாகனங்களில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக அழைத்து செல்வது என வாகன ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு துறையினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை வரை நடைபெற்ற தர பரிசோதனை ஆய்வில், அனைத்து தகுதிகளுடன் இருந்த 248 வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டது. தரமற்ற நிலையில் 23 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

The post செங்கல்பட்டில் 271 தனியார் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: