சிவகாசி மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

 

சிவகாசி, மே 20: சிவகாசி மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகாசி மாநகராட்சியில் அம்மன்கோவில்பட்டி, திருத்தங்கல், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை பள்ளி செல்லும் குழந்தைகளையும், தனியாக வருபவர்களையும் கடித்து விடுகின்றன. மேலும் இரவில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் துரத்தும் தெரு நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக செல்ல முயலும் போது விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விஸ்வநத்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் ஒருவரை தெரு நாய் கடித்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மாநகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகர பகுதியில் தெரு நாய்கள் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சியில் கவனிப்பாரற்று உள்ள 480 தெரு நாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய விஸ்வநத்தம் சாலையில் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் சீரமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நாய்க்கு ரூ.700 வீதம் நிதி ஒதுக்கீடு செய்து மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின் மூன்று நாட்கள் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் அந்தந்த பகுதிகளில் விடப்படும் என்றார்.

The post சிவகாசி மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: