காஞ்சிபுரம், மே 19: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படும் உதவி உபகரணங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் ஆக்சிலரி, எல்போ கிரட்சஸ் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும் வழங்கப்பட உள்ளது. மேலும், 18 முதல் 60 வயது வரை உள்ள மற்றுத்திறனாளிகள் தையல் பயிற்சி முடித்து, தையல் சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரொலேட்டர் எனப்படும் நடைபயிற்சி சாதனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.
இதனையடுத்து காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரங்கள், 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் பார்வை குறைபாடுடைய மாணவ – மாணவிகளுக்கு சிறிய எழுத்துக்களை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி பெற விண்ணப்பிக்கலாம். இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு மற்றும் டிஇடி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித்தேர்வுகளுக்கு, பயிலும் பார்வை குறைபாடுடையோருக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னனு முறையில் வாசிக்கும் கருவி பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலே குறிப்பிட்ட உதவி உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும் மருத்துவர் சான்று உட்பட), ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-2999 8040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசு இலவசமாக வழங்கும் உபகரணங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.