காஞ்சிபுரம் பகுதிகளில் பெய்த கோடை மழையால் நிரம்பி வழியும் பழைய சீவரம் பாலாற்று தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், மே 19: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கோடை மழையால், பழையசீவரம் பாலாறு தடுப்பணை முழுவதுமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கின்றன. இந்த ஆற்றுப் படுகைகளை மையமாக கொண்டு சுற்று வட்டார கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு பழையசீவரம்-பழவேரி பாலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ், ₹42 கோடி செலவில் புதிய தடுப்பணை நீர் வளத்துறை மூலம் கட்டப்பட்டது. இந்த தடுப்பணையால் அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் உட்பட 10க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளிலுள்ள 12 ஆயிரத்து 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன் ஷட்டர் மற்றும் பாசன கால்வாயிலிருந்து அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில், துணை கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பணைக்கு அருகே தாம்பரம் – பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், பருவமழையின்போது முழுவதுமாக இந்த தடுப்பணை நிரம்பியிருந்தநிலையில், காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், இந்த தடுப்பணை முழுவதுமாக தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

மேலும், கடந்த கால பருவமழையின்போது, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீரோடு, மணல் அடித்து வந்து, தடுப்பணையின் பள்ளமான பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பணையில், அதிகளவில் மணல் உள்ளே இருப்பதினால் தான், தற்போது மீண்டும் தண்ணீர் நிறைந்து நிரம்பி வழிவதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், வரும் காலங்களில் பாலாற்றில் மீண்டும் ஏதேனும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கூட இந்த தடுப்பணையில் மணல் அதிகளவில் நிறைந்துள்ளதால், தடுப்பணையில் முழுமையாக தண்ணீர் தேங்காத நிலை உள்ளது. எனவே தேங்கியுள்ள மணல்களை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post காஞ்சிபுரம் பகுதிகளில் பெய்த கோடை மழையால் நிரம்பி வழியும் பழைய சீவரம் பாலாற்று தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: