பத்தமடையில் கார் மோதி சிறுவன் பலியான விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நெல்லை,மே 19: பத்தமடையில் கார் மோதி சிறுவன் பலியான விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சப்கலெக்டர் ஆபிசில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்தமடை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் சரவணன்-அமராவதி தம்பதியினரின் சபரி(7). நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சிறுவன் வீட்டின் அருகே உள்ள பத்தமடை – களக்காடு சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவன் உயிரிழந்ததை உறுதி செய்தார். தகவலறிந்த பத்தமடை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிந்த பத்தமடை போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்தது மேலச்செவலை சேர்ந்த நாகூர்மீரான் மகன் சேக் முகம்மது ராஜா (33) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்யக்கோரி சிறுவனின் உறவினர்கள் பத்தமடை போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து சிறுவனின் உறவினர்கள் சேரன்மகாதேவி சப்கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று குற்றவாளியை உடனடியாக கைது செய்திடக்கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குற்றவாளியை உடனடியாக கைது செய்வதாக டிஎஸ்பி உறுதியளித்ததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்று சபரியின் உடலை பெற்று மாலையில் நல்லடக்கம் செய்தனர். இச்சம்பவத்தால் சேரன்மகாதேவியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி இவ்வழக்கில் தொடர்புடைய மேலச்செவலை சேர்ந்த நாகூர்மீரான் மகன் ஷேக் முகம்மது ராஜாவை (33) கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

The post பத்தமடையில் கார் மோதி சிறுவன் பலியான விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: