நீங்கள் சாப்பிடும் பழ வகைகள் ஆரோக்கியமானதா?.. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் பழங்களால் உடல் உபாதைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறப்பு செய்தி
இன்றைய காலகட்டத்தில் நாம் குடிக்கும் நீர் தொடங்கி சுவாசிக்கும் காற்று, சாப்பிடும் உணவுகள் என அனைத்திலும் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. எதில் கலப்படம் இல்லை என கேட்கும் அளவிற்கு கலப்படங்கள் அனைத்திலும் நிறைந்து விட்டன. சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்காத கீரைகள் மற்றும் காய்கறிகள் என கடைகளில் வியாபாரம் செய்யும் அளவிற்கு கலப்படங்கள் வந்துவிட்டன.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காத காய்கறிகள் என்று கூறி அதனை பசுமை காய்கறி கடைகள் என்றும் ஆர்கானிக் காய்கறி கடைகள் என்றும் விற்பனை செய்கின்றனர். இதனைப் பார்க்கும் மக்களின் மனதில் நாம் வாங்கும் காய்கறிகளில் கலப்படம் மிகுந்து உள்ளதா என கேள்வி எழுகிறது. அந்த அளவிற்கு கலப்படங்கள் நாம் உண்ணும் உணவில் கலந்து விட்டன.
இதன் காரணமாக நோய்கள் ஏராளம்; அதனை தீர்க்க மருந்துகளும் தாராளம் என்ற போக்கில் மனிதனின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. 100 வயதை கடந்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது 70 வயதை எட்டுவதற்குள் படாத பாடு படவேண்டி உள்ளது. இதற்கெல்லாம் தினமும் நாம் சாப்பிடும் உணவில் கலப்படங்கள் மிகுந்து உள்ளது என்பதை மக்கள் அறிந்தும் வேறு வழியில்லை என்ற நோக்கத்தில் அதனை தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி உடலுக்கு நல்லது என விரும்பி சாப்பிடும் பழங்களில் எந்த அளவிற்கு கலப்படங்கள் நிறைந்துள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளார்களா என்றால் கண்டிப்பாக கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும், விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற லாப நோக்கத்துடன் செயல்படும் ஒரு சில வியாபாரிகளால் பொதுமக்களை ஆரோக்கியம் எந்த அளவிற்கு கேள்விக்குறியாகிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அந்த அளவிற்கு பழங்களில் தற்போது நச்சுத்தன்மை அதிகரித்து விட்டதாக பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழத்தை பழுக்க வைக்க அதில் கெமிக்கல் ஸ்பிரே அடிக்கின்றனர். இதன் மூலம் ஒரு வாரத்தில் பழுக்கும் வாழைப்பழங்கள் 2 மணி நேரத்தில் பழுத்து விடுகிறது. உடனடியாக அவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதேபோன்று மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்த காலம் மாறி தற்போது புதுவிதமான ரசாயனங்களை பயன்படுத்தி அதனை பழுக்க வைக்கின்றனர். இதே போன்று ஆப்பிள் வெளியே மெழுகு எனப்படும் வேக்ஸ் பயன்படுத்தி அதனை பளபளப்பாக காட்டுகின்றனர். இதேபோன்று கோடைகாலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடும் ஏழைகளின் பழம் என அழைக்கப்படும் தர்பூசணி பழங்களிலும் தற்போது ரசாயனங்களை கலந்து சிவப்பாக அந்த பழங்கள் இருப்பதற்கு மருந்துகள் செலுத்தி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் தர்பூசணி பழத்தை விற்பனைக்கு வைக்கும் போது அது பார்ப்பதற்கு அழகாக சிவப்பாக காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் அது உடலுக்கு நல்லதா என்பதை மக்கள் அறிய மாட்டார்கள். இதுபோன்று ஒவ்வொரு பழங்களிலும் அது இயற்கையாக பழுப்பதற்கு முன்பு அதனை செயற்கை முறையில் பழுக்க வைத்து சந்தைக்கு எடுத்து வந்து விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான கலப்படங்கள் நிறைந்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் ஏற்படுகிறது. அவசர அவசரமாக பழங்களை சந்தைகளுக்கு எடுத்து வருவதற்கு என்ன காரணம். பழங்களை ஏன் இப்படி பழுக்க வைத்து பொதுமக்களை நோய்க்கு ஆளாக்குகின்றனர், பொதுமக்களுக்கு நோய்களை அள்ளி வழங்கி லாபம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன, இதற்கெல்லாம் போட்டி நிறைந்த இந்த உலகில் பதிலை எதிர்பார்க்க முடியாது.

எந்த அளவில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு அவர்கள் தங்களை பாதுகாத்து கொண்டால் நல்லது என மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் பழங்களில் மேற்கொள்ளப்படும் கலப்படம் குறித்தும் பொதுமக்கள் எவ்வாறு அதிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்பது குறித்தும் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் கூறியதாவது:
இயற்கையாக ஒரு பழம் பழுப்பதற்கு எத்திலின் காஸ் எனப்படும் ஒரு பொருள் தேவைப்படுகிறது. அது இயற்கையாகவே பழத்திலிருந்து வரும். இது ஒவ்வொரு பழத்திலும் இருக்கும் சிறிது சிறிதாக பழத்திலிருந்து அது வெளியே வரும்போது பழங்கள் இயற்கையாகவே பழுத்து விடும் இதை சிலர் வேகமாக பழுக்க வைப்பதற்காக எத்திலின் காஸ் எனப்படும் பொருளை பாக்கெட்டில் அடைத்து அதை பழங்கள் மீது போட்டு விடுகின்றனர். இதனால் பழங்கள் எளிதில் பழுத்துவிடுகிறது. ஒவ்வொரு பழத்திற்கும் ஏற்ப எவ்வளவு எத்திலின் காஸ் போட வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிகப்படியான எத்திலின் காஸ் போட்டு பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது போக கால்சியம் கார்பைடு கற்களை பயன்படுத்தியும் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதிலிருந்து சிந்தடிக் காஸ் உற்பத்தியாகும். இது போன்ற கற்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பதால் பொது மக்களுக்கு அதிகப்படியான உடல் உபாதைகள் அதிகபட்சமாக கேன்சர் வரை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேகமாக பழங்களை பழுக்க வைப்பதால் வெளியே உள்ள பழங்களின் தோள்கள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். ஆனால் உள்ளே உள்ள பழம் காய் போன்ற வடிவில் இருக்கும். தக்காளி, பப்பாளி, அவகோடா, கிவி போன்ற பழங்களிலும் கெமிக்கல் கலந்து பழுக்க வைக்கப்படுகின்றன. தற்போது எத்திலின் கெமிக்கலை ஸ்பிரே வடிவில் கொண்டு வந்து தண்ணீரில் கலந்து வாழைப்பழத்தில் அடிக்கின்றனர். அது போன்ற வாழைப்பழங்கள் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அதில் எந்த விதமான சத்துக்களும் இருக்காது. மாம்பழம் போன்ற பழங்கள் பழுக்க ஆரம்பிக்கும்போது அடிப்பகுதியில் இருந்து சிறிது சிறிதாக பழுத்து மேல் பகுதிக்கு வரும். ஆனால் இது போன்ற ரசாயனங்களை வைத்து பழுக்க வைக்கும் போது மாம்பழம் முழுவதும் ஒரே நேரத்தில் பழுத்து விடும். கெமிக்கல் தெளிக்கப்பட்ட பழங்களை எடுத்து நாம் சிறிய அளவில் அழுத்தி பார்க்கும் போது கள்ளு போன்று இருக்கும். அதை வைத்து கெமிக்கல் கலந்த பழம் என்பதை கண்டுபிடிக்கலாம்.

அதன் பிறகு பழத்தை நாம் ருசிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு விதமான புளிப்பு தன்மை இருக்கும். பழத்தின் உண்மையான சுவை அதில் இருக்காது அதை வைத்தும் கண்டுபிடித்து விடலாம். இப்போது மாம்பழம் சீசன் என்பதால் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைத்த காலம் மாறி எத்திபேன் எனப்படும் கெமிக்கலை வைத்து அதிகமாக பழுக்க வைக்கின்றனர்.
இதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது அதை மீறி அதிகமாக பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் சரி, வியாபாரிகளுக்கும் சரி பழங்கள் மீது ஏற்படுத்தப்படும் கலப்படம் குறித்து தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உணவு பாதுகாப்பு துறைக்கு கலப்படங்கள் குறித்த தகவல் வந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று அபராதம் விதித்து அவர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். அதன் பிறகு தொடர்ந்து அவர்கள் அதே தவறை செய்தால் குறிப்பிட்ட அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் அவர்கள் சிறை தண்டனை வரை செல்வதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்தவரை பழங்களை பொதுமக்கள் நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் முடிந்தவரை தோள்களை நீக்கிவிட்டு சாப்பிடுவதும் நல்லது இல்லை என்றால் பழங்களை காயாக இருக்கும் போதே வாங்கி அதனை வீட்டில் வைத்து பழுக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழங்களில் ரசாயனம் கலக்கப்படுவது குறித்து பெரம்பூரைச் சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘தற்போது மாம்பழ சீசன் என்பதால் அதிகப்படியான மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு என்ற கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இயற்கையாக ஒரு பழம் பழுப்பதற்கும் அதனை செயற்கை முறையில் வேகமாக பழுக்க வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. செயற்கையாக பழுக்க வைக்கும் போது அதில் உள்ள தன்மைகள் முற்றிலும் மாறி விடுகின்றன. அந்த காலகட்டத்தில் குடோன்களில் வைக்கோல் மூலம் பழுக்க வைப்பார்கள். இது போன்ற முறையில் பழங்கள் பழுப்பதற்கு ஒரு வாரம் ஆகும். ஆனால் இப்போது வேகமாக பழுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில கெமிக்கல்கள் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பழங்களின் தோள்களில் கெமிக்கல் ஒட்டிக்கொண்டு அதனை உட்கொள்ளும் போது நமக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக வயிற்றுப்போக்கு அதிகமாக வரும். மேலும் குடல் சார்ந்த நோய்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. பெருங்குடல் சிறுங்குடல் சம்பந்தப்பட்ட வியாதிகள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. மேலும் கிட்னியில் கற்கள் சேர வாய்ப்புள்ளது‌. குறிப்பாக ஆப்பிள் பளபளவென்று இருக்க வேண்டும் என்பதற்காக வேக்ஸ் என்னும் மெழுகை தடவுவார்கள் இதுவும் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். ஆப்பிள் போன்ற பழங்களை தோலுடன் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும் ஆனால் இந்த மெழுகு போன்ற வேதிப்பொருளை தடவுவதால் தோலை எடுத்துவிட்டு சாப்பிடுகின்றனர். இதனால் முழுமையான பலன் கிடைக்காமல் போய்விடுகிறது. சிலர் பழத்தை வாங்கி சுடு தண்ணீரில் போட்டு அதன் பிறகு சாப்பிடுவார்கள். இதிலும் பழத்தின் உண்மை தன்மை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கோடைகாலத்தில் ரசாயனம் கலக்காத பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

எப்படி கண்டறிவது?
பொதுமக்கள் எளிதாக கலப்படங்களை கண்டறிய நாம் வாங்கும் பழங்களை வீட்டுக்கு கொண்டு சென்று அதை தண்ணீரில் போட வேண்டும். அவ்வாறு தண்ணீரில் போடப்பட்ட பிறகு பழம் தண்ணீரில் மிதந்து வந்தால் அது கலப்படம் உள்ள பழம் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். பழத்தின் அடர்த்தி தங்காமல் பழம் தண்ணீரில் மூழ்கி விட்டால் அது கெமிக்கல் இல்லாத பழம் என நாம் கண்டறிந்து கொள்ளலாம். பழங்களை எடுத்து நுகரும்போது அதில் அந்த பழத்திற்கு உரிய வாசனை இருக்காது. அந்த வகையில் நுகர்தலை வைத்து பழங்களின் கலப்படங்களை கண்டுபிடிக்கலாம். பழங்களை வெட்டும்போது அது கெமிக்கல் போடப்பட்ட பழமா என்பதை கண்டுபிடிக்கலாம். ஒரு பழத்தை வெட்டும்போது அந்தப் பழங்கள் வெட்டுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதை வைத்தும் இது கெமிக்கல் கலந்த பழம் என்பதை கண்டுபிடிக்கலாம்.

மக்கள் நலன் அவசியம்
விவசாயிகள் அல்லது பழங்களை விற்பனை செய்பவர்கள் அதனை வியாபாரிகளிடம் கொடுத்து விடுகின்றனர். வியாபாரிகள் அதனை குடோனில் பதுக்கி வைத்து பழுக்க வைக்க நேரம் இல்லாத காரணத்தினாலும் மேலும் உடனடியாக பழுக்க வைத்து அதனை விற்பனை செய்து விட்டால் குடோன் வாடகை மிச்சமாகும் அல்லது பழங்கள் வீணாவதை தடுக்கலாம் என்ற நோக்கத்தில் இது போன்று உடனுக்குடன் பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதனை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் வியாபாரிகளாக பார்த்து திருந்தாவிட்டால் கலப்படங்கள் மீது பெரியதாக எந்த மாறுதலும் வந்து விடாது ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான குடோன்கள், பல இடங்களில் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கலப்படங்கள் நடக்கின்றன ஆனால் உணவு பாதுகாப்புத் துறையில் குறைந்த அளவிலே ஆட்கள் உள்ளனர். எனவே மக்கள் மீது பரிதாபம் கொண்டு வியாபாரிகளாக பார்த்து திருந்தாவிட்டால் கலப்படத்தை ஒழிக்க முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கிட்னியில் கற்கள் ஏற்படும்
பழங்கள் கெமிக்கல் முறையில் பழுக்க வைப்பது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவதால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான மாறுதல்கள் நடைபெறும். இதுதான் பிரச்சனை என்று எதையுமே நாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. குறிப்பாக வயிற்றில் புண் வரும் புண்கள் ஏற்படுவதால் அதை வைத்து பல பிரச்னைகள் உடலில் எழும் அதற்கு நாம் சாப்பிட்ட பழத்தில் ரசாயனம் கலந்து இருந்தது தான் காரணம் என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடியாது. பலருக்கு கிட்னியில் கற்கள் ஏற்படும். ஒரு பழத்தை நாம் சாப்பிட்டு அந்த கெமிக்கல் சார்ந்த விளைவுகள் நமது உடலில் நிகழ 3 மாதம் வரை கூட காலதாமதம் ஆகலாம் இதனால் எந்த பிரச்னை வருகிறது என்பதை நாம் கட்டமைத்து சொல்ல முடியாது ஆனால் பிரச்சனைகள் கண்டிப்பாக வரும்,’’ என்றார்.

The post நீங்கள் சாப்பிடும் பழ வகைகள் ஆரோக்கியமானதா?.. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் பழங்களால் உடல் உபாதைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: