கல்வி கொள்கையை வகுக்கும் வல்லுனர் குழுவின் முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்: முதல்வரை நேரில் சந்தித்து கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: தமிழ்நாடு கல்வி கொள்கையை வகுக்கும் வல்லுனர் குழுவிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான கல்வி கிடைத்திட நல்வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த மகத்தான முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படும் வகையில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை, மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு கல்விக் கொள்கை குழுவினருக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சரிசெய்து, ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றான விஞ்ஞான அடிப்படையிலான மாநில கல்விக்கொள்கை உருவாக்கிட கவனம் செலுத்த வேண்டும். மேலும், கல்விக்கொள்கைக்கான வல்லுனர் குழுவை மறுசீரமைக்கவும் அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கல்வி கொள்கையை வகுக்கும் வல்லுனர் குழுவின் முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்: முதல்வரை நேரில் சந்தித்து கே.பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: