‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற அடையாளத்தை இழக்கும் கோவை: ரூ.50 ஆயிரம் கோடி சொத்து இருந்தும் மூடுவிழா நடத்தும் ஒன்றிய அரசு

1947ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தபோது, மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில் வளர்ச்சி இல்லாததாலும் இந்திய பொருளாதாரம் மிகவும் பின் தங்கியிருந்தது. இதனால், நாட்டின் தொழில், வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 1950ல் ஒன்றிய அரசு திட்டக்குழுமை அமைத்தது. அப்போதைய பிரதமர் நேரு, கலப்பு பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த ‘5 ஆண்டு திட்டம்’ அறிவித்தார். 2வது ஐந்தாண்டு திட்டத்தின் போது (1956-60) நாட்டை தொழில்மயப்படுத்தும் தீர்மானத்தின் படி ஒன்றிய அரசு சார்பில் பொதுத்துறை நிறுவனங்கள் துவக்கப்பட்டது. வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கஷ்டப்பட்டு போராடி தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, ஒன்றிய பாஜ அரசு இன்று கூறுபோட்டு விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கம், பஞ்சாலைகள், அணுமின் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதால் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவது மட்டுமில்லாமல் மாநிலத்தின் அடையாளமே அழிந்து போகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய இந்த நிறுவனங்கள், இன்று கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகிறது. தொழிலாளிகள் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையாலும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், நாட்டின் பணக்கார முதலாளிகளுக்காக இரையாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதுகெலும்பாக வேளாண்துறை உள்ளது. நாட்டின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உணவு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது ஜவுளித் துறையாகும். குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் என இந்த நான்கு நகரங்கள் ஜவுளித் துறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் வருவாய், ஏற்றுமதி, அந்நியச் செலாவணிகளில் இந்த நான்கு நகரங்களும் தவிர்க்க முடியாத சக்திகளாக உள்ளன.

ஜவுளித் துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது பஞ்சாலைகள். இந்தியாவில் நலிவடைந்த நிலையில் உள்ள தனியார் பஞ்சாலைகளை நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் என்டிசி நிர்வாகம் (நேஷனல் டெக்ஸ்டைல் ​​கார்ப்பரேஷன் லிமிடெட்). இந்த நிர்வாகம், ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு ஒன்றிய பொதுத்துறை நிறுவனமாகும். இது அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட தனியார் துறையில் நலிவடைந்த ஜவுளி நிறுவனங்களின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக 1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. அதன்படி, 1968ல் நலிவடைந்த நிலையில் இருந்த 16 தனியார் பஞ்சாலைகளை நிர்வாகம் செய்ய என்டிசி தொடங்கப்பட்டது. பின்னர் 1972 முதல் 1973 வரை என்டிசி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஞ்சாலைகளின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்தது. பின்னர் 1974ம் ஆண்டு நாடு முழுவதும் 123 பஞ்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டன.

ஆனால் தற்போது என்டிசி வசம் இருந்த 100 பஞ்சாலைகள் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. 23 பஞ்சாலைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் தென்னிந்தியாவில் மட்டும் 14 பஞ்சாலைகள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 7 பஞ்சாலைகள் இயங்குகின்றன. அதில் கோவை மாவட்டத்தில் பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய மில்கள் தமிழ்நாட்டில் செயல்படும் மற்ற 2 பஞ்சாலைகள் ஆகும். இது தவிர தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தனியார் பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

நாடு முழுவதும் பஞ்சாலைகளுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி வரை சொத்துக்கள் உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலக்கட்டத்தில் ரூ.10 கோடி மூலதனம் மதிப்பில்தான் பஞ்சாலைகள் செயல்பட்டன. அதன் வளர்ச்சி மூலம் தற்போது ரூ.50 ஆயிரம் கோடி வரை வளர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாலைகளை நவீனமயமாக்குவதற்காக என்டிசி நிலங்களை விற்ற வகையில் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
இதில் ரூ.2 ஆயிரம் கோடி வரை நாட்டில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடனாக வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பஞ்சாலைகள் மூலம் தினமும் 2.5 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நூல் உற்பத்தி குறைந்துள்ளது.

கோவையில் உள்ள 5 ஆலைகளில் 2 ஆலைகள் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளன. லாபத்தில் சென்று கொண்டிருந்த 5 பஞ்சாலைகளும் நிர்வாக திறன் இல்லாததால் நஷ்டத்தை நோக்கி நகர தொடங்கியது. கொரோனா காரணமாக 5 பஞ்சாலைகளும் மூடப்பட்டன. பஞ்சாலைகளை திறக்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், 3 ஆலைகள் திறக்கப்பட்டு பின்னர் சில நாட்களிலேயே மூடப்பட்டன. தற்போது மூடப்பட்ட பஞ்சாலைகளை திறக்கக்கோரி, கஞ்சி காய்ச்சுதல் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் அலட்சியத்தால் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பறிபோனதோடு, பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜவுளி தொழிலுக்கு பெயர்பெற்ற கோவை மற்றும் திருப்பூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’, ‘டெக்ஸ்டைல் சிட்டி’ என்ற அடையாளத்தை வைத்திருந்தது. ஆனால், பஞ்சாலைகளுக்கு ஒன்றிய அரசு நடத்தும் மூடுவிழாவால், தங்க பாத்திரத்தில் பிச்சை எடுக்கும் கதையாக மாறி உள்ளது.

தங்க பாத்திரத்தில் பிச்சை எடுக்கும் பஞ்சாலைகள்
* தென் இந்தியாவில் 14 ஆலைகளின் உற்பத்தி 1 லட்சம் கிலோ நூல்
* தமிழ்நாட்டில் 7 பஞ்சாலைகளில் ஒருநாள் சராசரி உற்பத்தி 50 ஆயிரம் கிலோ நூல்
* 1 கிலோ நூல் விலை ரூ.300
* தமிழ்நாட்டில் ஒரு நாள் வருவாய் ரூ.1.50 கோடி
* நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ரூ.25 லட்சம் கோடி வருமானம்
* இந்திய அரசின் கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சகத்தின் கீழ் 330 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன
* அதிக லாபம் ஈட்டும் 94 நவரத்தின நிறுவனங்கள் உள்ளன.

* கார்ப்பரேட்டுகளுக்கு 5 ஆலைகள்
நாடு முழுவதும் குறைக்கப்பட்ட பஞ்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் சமகால தொழில்துறையின் போக்குக்கு ஏற்ப பஞ்சாலைகள் மற்றும் ஆலைகளின் அனைத்து துணை நிறுவனங்களும் டெல்லியில் அமைந்துள்ள என்டிசி தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு 1.4.2006 முதல் ஒரே நிறுவனமாக மாற்றப்பட்டது. என்டிசி தனது உபரி சொத்துக்களை விற்பதன் மூலம், நிதியை உருவாக்கி அதன் அனைத்து ஆலைகளையும் நவீனமயமாக்க உள்ளது. 5 ஆலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் செயல்பட உள்ளன. அகமதாபாத் (குஜராத்), அச்சல்பூர் (மகாராஷ்டிரா), ஹாசன் (கர்நாடகா) பகுதிகளில் 3 கூட்டு ஜவுளி கிரீன் பீல்ட் யூனிட்களை என்டிசி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் உள்ள பஞ்சாலைகள்
மாநிலம் எண்ணிக்கை
தமிழ்நாடு 7
கேரளா 4
மாகி பாண்டிச்சேரி 1
கர்நாடகா 1
ஆந்திரா 1

* கொடிகட்டி பறந்த கோவை
கோவை மில்கள் வளர்ச்சியில் 1932ம் ஆண்டு முக்கியமான ஆண்டாகும். கோவை மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 1930 முதல் 1939ம் ஆண்டுகளில் 27 மில்கள் புதிதாக துவக்கப்பட்டன. 1930ல் அகமதாபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கைத்தறித்துறைக்கு வழங்க போதிய நூல்கள் இல்லாததால், தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் நூல்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த கைத்தறித்துறைக்கு வழங்கப்பட்டன.

* மாறிப்போன பெருமை
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலைக் கழகம் எடுத்து அவற்றை இயக்கியது. ஒரு கட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம், போனஸ் வழங்கப்பட்டது. பஞ்சாலைகளில் பணிபுரிவது மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்பட்டது. கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கியவர்கள் என்ற பெருமையும் கிடைத்தது. ஆனால் 1990க்கு பின்னர் பஞ்சாலைகளின் நிலை தலைகீழாக மாறியது. நூற்றுக்கணக்கான பஞ்சாலைகள் மூடப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

* ராணுவம், காவல், ரயில்வே துறை ஆடைகளை தயாரிக்க வாய்ப்பு
என்டிசி ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. என்டிசிக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. சுமார் ரூ.1000 கோடி செலவு செய்து என்டிசி ஆலைகளில் உள்ள பழமையான கருவிகளை அகற்றிவிட்டு நவீன இயந்திரங்களை பொருத்துவதன் மூலம் ராணுவம், காவல் துறை, ரயில்வே துறை என அனைத்து துறைகளில் உள்ள சீருடைப் பணியாளர்களுக்கு தேவையான துணிகளை என்டிசியிடம் கொள்முதல் செய்ய முடியும். இதன் மூலம் ஆலையை லாபத்தில் செயல்படுத்த முடியும்.

* 30 ஆயிரம் பேர் எதிர்காலம் கேள்விக்குறி
ஹிந்த் மஸ்தூர் சபா தொழிற்சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ராஜாமணி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள என்டிசி பஞ்சாலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் என 4 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் பஞ்சாலைகள் மூடப்பட்டன. அப்போது ஒரே ஒரு மாதம் மட்டும்தான் முழு சம்பளம் வழங்கப்பட்டது. அதன்பின்பு பாதி சம்பளம்தான் வழங்கப்படுகிறது. அந்த சம்பளமும் கடந்த 6 மாதமாக சரிவர வழங்கப்படவில்லை.

இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்த பாதி சம்பளமும் வழங்கப்படவில்லை. இனி ஆலைகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்குறியுடன் கிடைத்த வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். என்டிசி தொழிலாளர்கள் நேரடியாக 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் அவர்களது குடும்பம், என்டிசி மூலம் மறைமுகமாக பயன் அடைந்த உணவு கடைகள், போக்குவரத்து நிறுவனங்கள் என சுமார் 30 ஆயிரம் பேர் வரை தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாலைகள் மட்டுமல்ல, எந்த நிறுவனங்களுமே அரசால் நடத்தப்பட வேண்டாம். நிர்வாக ரீதியாக மட்டுமே செயல்படலாம் என்கிற எண்ணம் ஒன்றிய அரசுக்கு உள்ளது.

இதுவே அதன் கொள்கையாக உள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. என்டிசி தொழிலாளர்கள் உணவு விடுதிகளுக்கும், கூலி வேலைகளுக்கும் செல்கின்றனர். பெண்கள் பலரும் வீட்டு வேலைகளுக்கு செல்கின்றனர். 40 முதல் 50 வரையுள்ள தொழிலாளர்களுக்கு இந்த வேலைகளும் கிடைப்பது இல்லை. கிடைத்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம், திருமணம் போன்றவற்றுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் என்டிசி நிர்வாகம் சொத்துகளை வைத்து கொண்டு தொழிலாளர்களை மிகவும் வஞ்சித்து வருகிறது.

நாடு முழுவதும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. வேலையின்றி தவிக்கும் என்டிசி பெண் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. குடும்ப சூழ்நிலைகளால் அவர்கள் தத்தளித்து கொண்டு உள்ளார்கள். மிகுந்த மன வேதனையில் தொழிலாளர்கள் உள்ளனர். என்டிசி பஞ்சாலைகள் திறக்கப்பட வேண்டும். இல்லை என்றால் மூடிவிட்டு அனைத்து பணப்பயன்களையும் தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும். அவர்களுக்கு மாற்று வேலைகளையும் அரசே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற அடையாளத்தை இழக்கும் கோவை: ரூ.50 ஆயிரம் கோடி சொத்து இருந்தும் மூடுவிழா நடத்தும் ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: