ஆவடி: ஆவடியில் நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த இன்ஜினியர் சிக்கி பரிதாபமாக பலியானார். ஆவடி, வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் (32). இவர், கந்தன்சாவடி பகுதியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி ஜனனி (25) மற்றும் 9 மாத பெண் குழந்தை உள்ளனர். நரேந்திரனின் பெற்றோர், சொந்த ஊரான அரக்கோணத்தில் வசித்து வருகின்றனர். சொந்த ஊரில் வசிக்கும் பெற்றோரை காண நேற்று காலை காரில் தனியே நரேந்திரன் சென்றிருந்தார்.
பெற்றோரை பார்த்துவிட்டு, நேற்றிரவு ஆவடிக்கு நரேந்திரன் திரும்பி கொண்டிருந்தார். இவரது கார் ஆவடி-பூந்தமல்லி சாலையில் விவேகானந்தா பள்ளி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் நரேந்திரன் தலையில் படுகாயம் அடைந்து, காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே நரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆவடி-பூந்தமல்லி சாலையில் நீண்ட காலமாக மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் குண்டும் குழியுமாக காணப்படும் அப்பகுதி சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. இதில் பலர் படுகாயம் அடைவதுடன், நரேந்திரன் உள்பட ஒருசில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகளை உடனடியாக முடித்து, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post சாலை தடுப்பில் கார் மோதி இன்ஜினியர் பலி appeared first on Dinakaran.
