‘கொம்பில் கத்தி கட்டக் கூடாது’: கிடா முட்டு சண்டைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

மதுரை: சிவகங்கை மாவட்டம், திட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டு ஆட்டினங்களை பாதுகாக்கும் விதமாக நீண்ட காலமாக கிடாமுட்டு சண்டை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். எங்கள் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் முளைப்பாரி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா மே 29ல் நடக்கிறது. இதையொட்டி கிடா முட்டு சண்டை போட்டிகளை நடத்த அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். அரசு சிறப்பு பிளீடர் பர்ஷானா கவுசியா ஆஜராகி, சமீபத்தில் இந்த கிராமத்தில் கொலை நடந்துள்ளது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த நிகழ்வோடு தொடர்புள்ளதால் கொலை நடந்ததாக கூறுவதற்கு, எந்தவித ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, கிடாமுட்டு சண்டை போட்டி நடத்த தேவையான நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். கிடாவின் கால்கள் மற்றும் கொம்பில் கத்தி போன்றவற்றை கட்டக் கூடாது. கொம்பில் விஷம் தடவக் கூடாது. மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடாவிற்கு கொடுக்க கூடாது. இதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும். தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ‘கொம்பில் கத்தி கட்டக் கூடாது’: கிடா முட்டு சண்டைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: