கரூர், மே 12: கடந்த 15 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த மாதம் தொடர்ந்து ஆறு நாட்கள் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் கரூர் மாநகரம் குளிர்ந்தது. இதனைத் தொடர்ந்து, மே மாதத்தில் துவக்கத்தில் சில நாட்களும், தொடர்ந்து, வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக தொடர்ந்து முன்று நாட்களாக மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான நிலை நிலவியதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி 6.4 மிமீ, க.பரமத்தி 1.8 மிமீ, பஞ்சப்பட்டி 3.6 மிமீ, பாலவிடுதி 13.2 மிமீ, மயிலம்பட்டி 1 மிமீ என மாவட்டம் முழுதும் 28 மிமீ மழை பெய்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. இதே நிலை நேற்று காலை முதல் மாலை வரை நீடித்தது. வழக்கத்தை விட அதிகளவு வெப்பம் கரூர் மாவட்டம் முழுதும் நிலவியது. இந்த சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் சிரமப்பட்டனர். இந்த சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் நேற்று மாலை 6 மணியளவில் லேசான இடி மின்னலுடன் அரை மணி நேரம் மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் சற்றே நிம்மதியடைனர்.
The post கரூரில் திடீர் மழையால் சீதோஷ்ண நிலையில் முற்றிலும் மாற்றம் appeared first on Dinakaran.
