திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம், மே 11: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்று சென்றனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தினமும், சிம்ம வாகன சேவை, சிறிய திருவடி சேவை, புன்னையடி சேவை, கருட சேவை, யானை வாகன சேவை நடத்தி, நித்ய கல்யாண பெருமாள் தேவி, பூதேவியுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதைதொடர்ந்து, 7ம் நாளான நேற்று தேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, நித்ய கல்யாண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள், கோவிந்தா… கோவிந்தா… என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதி வழியாக இழுத்து சென்றனர். இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சாமியை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் செய்திருந்தார். மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: