வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்

கெங்கவல்லி, மே 11: வீரகனூர்-வெள்ளையூர் ஏரி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக ₹7லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தூர்வாரும் பணிகள் துவங்கியது. 23 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகள் மகிழ்ச்சி. வீரகனூர் ஏரியில் இருந்து, வெள்ளையூர் ஏரிக்கு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்புகளாலும், புதர் மண்டியும் கிடப்பதால் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வீ. ராமநாதபுரம் மற்றும் வெள்ளையூர் பகுதி ஏரி பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக வீரகனூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க முன்னாள் பொருளாளர் கணேசன் என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டரருக்கு புகார் மனுக்களை அனுப்பி வந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு (2022) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு இது குறித்து பேசி, தீர்வு காண வலியுறுத்தினார். இதன் எதிரொலியாக, டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து, ₹7 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன் பின் தூர் வாருவதற்கான முதற்கட்ட பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது. இதில் ஆத்தூர் பொதுப்பணித்துறை நீர்வள உதவி பொறியாளர் மாணிக்கம், வெள்ளையூர் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: