கூடலூர் அருகே புளியம்பாறையில் கண்கவர் வண்ண ஓவியங்கள் மூலம் அரசு துவக்க பள்ளி புதுப்பொலிவு

 

கூடலூர், மே 10: கூடலூர் அருகே புளியம்பாறையில் அரசு துவக்க பள்ளி வளாகத்தையும், கட்டிடத்தையும் கண்கவர் வண்ண ஓவியங்களை வரைந்து பட்டாம்பூச்சி குழுவினர் புது பொலிவூட்டி உள்ளனர். இதையடுத்து குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த புளியம்பாறை அரசு துவக்கப்பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் வெளிப்புற சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்து பள்ளி வளாகம் வண்ண மயமாக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய பட்டாம்பூச்சி குழுவினர் இந்த ஓவியங்களை வரைந்து ‘சபாஸ்’ பெற்றுள்ளனர்.

குறிப்பாக அறிவியல், கலாச்சாரம், தேசிய தலைவர்கள், குழந்தைகளை கவரும் பொம்மை உருவங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை பட்டாம்பூச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சந்தோஷ் குமார் தலைமையில் ஆசிரியர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பிரபு, சுரேஷ்குமார், செந்தில்குமார், காளிதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் முழு மூச்சுடன் ஓவியங்கள் வரையும் பணியை செய்து முடித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் செய்தனர். இதையடுத்து, அரசு பள்ளிகளில் இது போன்ற ஓவியங்கள் வரைந்து மாற்றம் செய்யும் பணியை பல்வேறு பள்ளிகளில் செய்து உள்ளதாகவும், ஓவியங்கள் வரைவதற்கு தேவையான வண்ணங்களை பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்று ஓவியங்கள் வரையும் பணியை இலவசமாக செய்து கொடுத்து வருவதாகவும் பட்டாம்பூச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post கூடலூர் அருகே புளியம்பாறையில் கண்கவர் வண்ண ஓவியங்கள் மூலம் அரசு துவக்க பள்ளி புதுப்பொலிவு appeared first on Dinakaran.

Related Stories: