முதல்வர் மு.க.ஸ்டாலின் 23ம் தேதி ஜப்பான் செல்லும் நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் குழு ஜப்பான் பயணம்: டோக்கியோ வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்கின்றனர்

டோக்கியோ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் குழு ஜப்பான் சென்றுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் 23ம் தேதி ஜப்பான் செல்கிறார். கடற்கரை நகரமான சென்னை புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரமானவையாகவும், சில பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வானவையாகவும் உள்ளன.

இதனால், சென்னையில் மிதமான மழை பெய்தாலே போதும், சாலையெங்கும் மழைநீர் தேங்கும் நிலையும், அதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மழை சென்னையை தத்தளிக்க வைப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழை காலங்களில் தமிழகம் முழுவதும் அதிக மழையைப் பெற்றுள்ளது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புளில் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை தடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் வடகிழக்கு பருவமழையால் சென்னையின் முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவற்றின் சார்பில் சுமார் ரூ.4,749 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்குவது குறைந்துள்ளது. சென்னையில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள, நீர்வளத்துறையுடன் தனியார் நிறுவனத்துடன் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை வாயிலாக, சென்னை ஆற்றுப் படுகைகளில் விரிவான வெள்ள கட்டுப்பாட்டு திட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய நீர்வழித்தடங்களில் ஆங்காங்கே நீரோட்டத்தை கண்காணிக்கும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகள் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ம் தேதி ஜப்பான் செல்ல உள்ள நிலையில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் குழு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீர்வளத்துறை உயரதிகாரி கூறுகையில், ‘‘சென்னை பெருநகர பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையிலும் ஆற்றுப் படுகைகளில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏதுவாக டோக்கியோ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் ஜப்பான் சென்றுள்ளனர். இவர்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஏற்பாட்டில் டோக்கியோவிற்கு சென்றுள்ளனர். 17ம் தேதி வரை ஜப்பானில் இருந்து டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் நீர்வழித்தட மேலாண்மை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் 23ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்கள்’’ என்றார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 23ம் தேதி ஜப்பான் செல்லும் நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் குழு ஜப்பான் பயணம்: டோக்கியோ வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்கின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: