நல்லம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் பெரிய ஏரியை தூர்வார மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 28 ஹெக்டேர்ஸ் நிலப்பரப்பு கொண்ட நல்லம்பாக்கம் பெரிய ஏரியை தூர்வாரி ஏரிக்கரையை பலப்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நல்லம்பாக்கம் பெரிய ஏரி நீரை வைத்து விவசாயிகள் காலம் காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளும் அங்கு சென்று தண்ணீர் குடித்து வருவது வழக்கம். மேலும், கோடை காலங்களில் பொதுமக்கள் அங்கு சென்று துணி துவைத்தும், மீன்பிடித்தும் வருகின்றனர். இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் எளிதில் செல்வதற்காக மேற்படி ஏரிக்கரையை காலம், காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஏரிக்கரை முழுவதும் வேலிக்காத்தான் என அழைக்கப்படும் சீமைகருவேல மரங்கள் அடர்த்தியாக காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இந்த ஏரியை பல ஆண்டுகளாக தூர் வாராததால் குறைந்த அளவே தண்ணீர் தேங்குகிறது. எனவே, கோடைக்காலங்களில் தண்ணீர் வற்றி விடுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடுகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஏரிக்கரையில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு பலம் இழந்தும் காணப்படுகிறது. இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரிக்கரை உடைந்ததால் தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டன. அதேபோல், தற்போது திடீரென கோடை மழை பெய்தால் ஏரி நிரம்பி வருகிறது. எனவே, பருவ மழை பெய்வதற்குள் ஏரியை தூர்வாரி ஏரிக்கரையை பலப்படுத்தி தர மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post நல்லம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: