பவானிசாகர் அணை மேல் பகுதியில் தேன்கூடு எச்சரிக்கை பலகை

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ‌ ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதியில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை பணியாளர்கள் மட்டுமே அணையின் மேல் பகுதிக்கு சென்று வருகின்றனர். அணையின் மேல் பகுதியில் உள்ள மேல் மதகு ஷட்டர் பகுதியில் தேனீக்கள் தேன்கூடு கட்டி உள்ளன. இதன் காரணமாக அணையின் மேல் பகுதியில் அவ்வப்போது தேனீக்கள் கூட்டமாக பறந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அணையின் மேல் பகுதியை பார்வையிடுவதற்காக சென்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் அதிகாரிகள் தேனீக்கள் இடமிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

இதனிடையே அணையின் மேல் பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக மதகுப்பகுதிக்கு செல்வோரின் கவனத்திற்காக தற்போது பவானிசாகர் நீர்வளத்துறை சார்பில் அணையின் மேல் பகுதியில் தேனீக்கள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தேனீக்களில் உருவம் பொறித்த படங்கள் பதிக்கப்பட்டு தேனீக்கள் எச்சரிக்கை என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

The post பவானிசாகர் அணை மேல் பகுதியில் தேன்கூடு எச்சரிக்கை பலகை appeared first on Dinakaran.

Related Stories: