எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ள சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்: எதிர்த்து மனு செய்தவருக்கு ரூ.25,000 அபராதம் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அதிரடி

மதுரை: போட்டித்தேர்வை எதிர்கொள்ள எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சிறப்பு வகுப்பில் பங்கேற்க வேண்டியுள்ளது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, இதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்துடன் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. நெல்லை திம்மராஜபுரத்தை சேர்ந்த பெரியராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை, பொதிகை நகரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. ஏப். 28 முதல் மே 31 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் மன அழுத்தம் உடல் பாதிப்புகளை தடுத்து, புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆனால், இந்தப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2விற்கான சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த வகுப்புகளில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டுமென கூறுகின்றனர். அரசு விதிகளுக்கு முரணாக செயல்படும் இப்பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.தண்டபானி, ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் பிளீடர் செல்வகணேசன் ஆஜராகி, ‘‘மனுதாரர் குடும்பத்தினர் யாரும் இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. பள்ளியோடு மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தற்போதைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. இதற்காக சிறப்பு வகுப்பில் பங்ேகற்க வேண்டும். இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை திம்மராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக செலவிட வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ள சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்: எதிர்த்து மனு செய்தவருக்கு ரூ.25,000 அபராதம் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: