காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்ணகியம்பாள் சமேத சித்ரகுப்தர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க கேது தோஷம் போக்கும் சிறப்புக்குரிய கோயிலாக விளங்கும் சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் திருப்பணிகள் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் மே மாதம் 1ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9.30 மணிக்கு, ராஜகோபுரத்திற்கு புனித நீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவர் சித்ரகுப்தர் சாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் கர்ணகி அம்பிகைக்கும், சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணமும், இரவு வீதிஉலாவும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (5ம்தேதி) அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சித்ரா பௌர்ணமி சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ரகுராமன், உறுப்பினர்கள் சந்தானம், ராஜாமணி, கோயில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் தலைமையில், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுபோத்கான் சகாய், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கே.சின்கா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜூ, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், அனைத்திந்திய காயஸ்தா சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் மேடவாக்கம் பிரபாகரன், சரவணா பிரதர்ஸ் கணேஷ், சரவணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து மாற்றம்: சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தலைமையில் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் இதர துறைகளை சேர்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விழாவின்போது பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி வந்து செல்ல ஏதுவாக காஞ்சிபுரம் மாநகருக்குள் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம். நெல்லுக்காரத் தெருவில் எவ்வித வாகனங்கள் வராமல் தடுக்க காஞ்சிபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்களை பூக்கடைச் சத்திரம் மற்றும் ஆஸ்பிட்டல் சாலை வழியாகவும், இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாகனங்கள் பேருந்து நிலையம் வழியாகவும் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறைந்த அளவிலே பங்கேற்ற பக்தர்கள்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில் ஒரு அரிதான கோயிலாகும். ஏனென்றால், உலகிலேயே காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு கோயில் உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழலாம் என்றும், இக்கோயிலின் மூலவர் சித்ரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா குறித்த செய்திகளை பெரிய அளவில் விளம்பரப்படுத்தாததால், பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும் உள்ளூரில் இருந்து வந்த பக்தர்களையும் போலீசார் கெடுபிடி காட்டியதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

The post காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: