திருத்தணி பழைய தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா துவங்கியது

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில் இந்தாண்டு தீ மிதி திருவிழா நேற்று அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருத்தணி பகுதி முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இந்த தீமிதி விழாவையொட்டி நேற்றுமுன்தினம் முதல் வருகின்ற 21ம் தேதி வரை தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு, மதியம் மகா பாரத சொற்பொழிவும் இரவு நாடகமும் நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 12ம் தேதி சுபத்திரை கல்யாணம், 15ம் தேதி அர்ஜூனன் தபசு மற்றும் 21ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் அன்றைய தினம் மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து வருகின்ற 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் சீனிவாசன் தலைமையில் கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

The post திருத்தணி பழைய தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: