காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற பெண்: களமிறங்கிய தனிப்படைகள்

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில், கைக்குழந்தையை விட்டுச்சென்ற பெண்ணையும், அவரை அழைத்துச் சென்ற ஆண் நண்பரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேலூர், காட்பாடி ரயில் நிலையத்திலுள்ள ஒன்றாவது மேடையில் சேலத்தைச் சேர்ந்த 63 வயதான மூதாட்டி சுந்தரி, ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது, 6 மாத பெண் குழந்தையுடன் அங்குவந்த பெண் ஒருவர், மூதாட்டி சுந்தரியிடம் கழிவறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு 5 நிமிடங்கள் குழந்தையை வைத்துக்கொள்ளும்படி கூறிச் சென்றிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்ப வரவில்லை. இதையடுத்து, கைக்குழந்தையுடன் பதறிபோன மூதாட்டி சுந்தரி, ரயில்வே போலீஸாரிடம் சென்று நடந்ததைக் கூறி குழந்தையை ஒப்படைத்தார்.

போலீஸார் உடனடியாக அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு ரயில் நிலையத்துக்குள் பெண் ஒருவர் வந்ததும், மூதாட்டியிடம் குழந்தையைக் கொடுத்த பின்னர் அவர் வெளியே சென்று, ஆண் ஒருவர் மற்றும் அவரிடமிருந்த 2 சிறு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருந்தது.

மூதாட்டியிடம் கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை யாருடையது, அவர்களின் பிடியில் இருந்த மேலும் 2 பிள்ளைகள் யார், அந்த ஆணும் பெண்ணும் குழந்தைக் கடத்துபவர்களா, என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த ஜோடியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
ரயில் நிலையத்தைவிட்டு வெளியே சென்றது, ஆட்டோவில் பயணித்தது, கண்ணமங்கலம் , ஆரணி வழித்தடத்தில் சென்ற பேருந்தில் ஏறியது என வழிநெடுகிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து ஒருவழியாக அந்த ஜோடியின் அடையாளத்தைக் கண்டறிந்துவிட்ட தனிப்படை போலீஸார், அவர்களைப் பிடிக்க கண்ணமங்கலம், ஆரணி பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனிடையே மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற பெண்: களமிறங்கிய தனிப்படைகள் appeared first on Dinakaran.

Related Stories: