ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் இன்றியமையாதவை : ஓபிஎஸ் உலக பத்திரிகை சுதந்திர தின வாழ்த்து!!

சென்னை உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு அரிய தகவல்களை அவ்வப்போது அளிப்பதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் முக்கியப் பங்கினை வகிப்பதால், பத்திரிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக பத்திரிகை சுதந்திர நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஊடுருவி பல்வேறு செய்திகளை சேகரிக்கும்போது பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் வகையில் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் பத்திரிகைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் இன்றியமையாதவையாக இருப்பதால் அவற்றிற்கு சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. இதையும்மீறி பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படுமேயானால் அந்நாட்டின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இதனை நன்கு உணர்ந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளித்ததோடு, பத்திரிகையாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி, வீட்டு வசதி என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தினார்கள்.”சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செய்திகளை வெளியிடவும், நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய வழிவகுக்கவும் பத்திரிகைகள் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, மீண்டும் ஒரு முறை பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்துகளை பத்திரிகையாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் இன்றியமையாதவை : ஓபிஎஸ் உலக பத்திரிகை சுதந்திர தின வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: