உடன்குடியில் தகிக்கும் அனலால் ஏடிஎம்மை ஆக்கிரமிக்கும் குடிமகன்கள்

உடன்குடி, மே 3: உடன்குடியில் தகிக்கும் அனலால் ஏடிஎம்மை குடிமகன்கள் ஆக்கிரமித்து வருவதால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம், நாளை மறுதினம் துவங்க உள்ள நிலையில் உடன்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் வேளையில் மட்டுமின்றி இரவில் கடும் புழுக்கம் காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சாலைகளில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாநகர், கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், உடன்குடி வட்டாரத்தில் சாரல் கூட இல்லை. வழக்கம்போல் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க உடன்குடி பகுதியில் ஏசியுடன் இயங்கும் ஏடிஎம் மையத்தை குடிமகன்கள் ஆக்கிரமித்து குறட்டை விட்டு தூங்குவது வாடிக்கையாகி வருகிறது.

சத்யமூர்த்தி பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்கும் குடிமகன்கள், போதையில் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் ஏசி காற்றில் குறட்டை விட்டு தூங்குகின்றனர். இதன் காரணமாக ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க வருகிறவர்கள் உள்ளே சென்று தங்களுக்கான பரிவர்த்தனையை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குடிமகன்களின் அட்ரா சிட்டிசை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடன்குடியில் தகிக்கும் அனலால் ஏடிஎம்மை ஆக்கிரமிக்கும் குடிமகன்கள் appeared first on Dinakaran.

Related Stories: