கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.எஸ். சிவஞானம் : 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் வழக்குகளில் தீர்ப்பளித்தவர்

டெல்லி : தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நீதிபதி திருநெல்வேலி சுப்பையா சிவஞானம் திருநெல்வேலி மாவட்டத்தில் 1963ல் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் சுப்பையா, தாய் நளினி. டி.எஸ்.சிவஞானம் லயோலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் 1986ல் சட்டப் படிப்பை முடித்தார். கடந்த 2000ல் மத்திய அரசு வக்கீலாக பதவி வகித்துள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், கஸ்டம்ஸ் துறை வக்கீலாகவும் பணியாற்றியவர். கடந்த 2009 மார்ச் 31ல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்று 2011 மார்ச் 29ல் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார்.ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவு செல்லும் என்ற முக்கிய தீர்ப்பையும், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பும் இவரது தீர்ப்புகளில் முக்கியமான தீர்ப்புகளாக கருதப்படுகிறது.

தொடர்ந்து 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, கடந்த மார்ச் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், அதே நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக இருந்த டி.எஸ்.சிவஞானம் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். விரைவில் அவருக்கு மேற்கு வங்க ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

The post கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.எஸ். சிவஞானம் : 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் வழக்குகளில் தீர்ப்பளித்தவர் appeared first on Dinakaran.

Related Stories: