மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் வாங்கும் தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் பயன்பெற முடியாமல் தவிப்பு: தொழிற்சங்கங்கள் ஆதரவு கரம் நீட்டுமா?

சிறப்பு செய்தி
ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இஎஸ்ஐ திட்டத்தில் 21 ஆயிரத்துக்கு மேல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்தியா முழுவதும் தனியார் தொழிற்சாலைகளில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் மருத்துவ திட்டத்தை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கொண்டு வந்ததுதான் தொழிலாளர் அரசு காப்பீடு திட்டம். தனியார் நிறுவன தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் மாத சந்தா கட்டி வந்தால் இஎஸ்ஐ பயன் கிடைக்கும். தொழிலாளர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர் பயன் பெறலாம்.

தொழிலாளரின் குழந்தை 18 வயதுக்கு மேல் ஆனால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும், ஒரு தொழிலாளி 58 வயது வரை இஎஸ்ஐ சலுகை பெறலாம். அதற்கு மேல், ஒரு தொழிலாளி இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கலாம். பொதுவாக, 1000 தொழிலாளர்கள் உறுப்பினராக இருந்தால் அந்த பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை கிளை தொடங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மண்டல இஎஸ்ஐ மருத்துவமனையில் பெறலாம். இஎஸ்ஐ தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தத்தில் இருந்தால் அவசரத்திற்கு தனியார் மருத்துவமனையில் தொழிலாளர் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு தொழிற்சாலையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தால், அவர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைய வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் சம்பளத்துக்கு ஏற்ப 0.75 சதவீதம் பிடிக்கப்படும், தொழில் நிறுவனத்தினரிடமிருந்து 3.25 சதவீதம் சேர்த்து 4 சதவீதம் சந்தா உறுப்பினரின் கணக்கில் செலுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்த குடும்ப போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை காண்பித்து இஎஸ்ஐ மருத்துவக் கிளையில் சிகிச்சை பெறலாம்.

இஎஸ்ஐயின் மண்டல அலுவலகம் சென்னையில் உள்ளது. கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றை தலைமை இடமாக கொண்டு நான்கு துணை மண்டலங்கள் செயல்படுகிறது. மேலும், தொழிலாளர் 3 முதல் 5 ஆண்டுகள் இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்தினால், தொழிலாளர்களின் குழந்தைகள் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இஎஸ்ஐ சார்பில் இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 2 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

மேலும், இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு பிரசவத்தின் போது 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. தொழிலாளி இறந்து விட்டால் அவருடைய ஈமச்சடங்கிற்கு 15,000 வழங்கப்படுகிறது. தொழிலாளர் உடல்நலம் சரியில்லை என்றால் இஎஸ்ஐ மருத்துவமனையில் விடுப்புடன் கூடிய சம்பளம் பெறலாம். இப்படி இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு 21 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு மசோதா நிறைவேற்றியுள்ளது.

ஆனால், தற்போது ஒன்றிய அரசின் தொழிலாளர் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு காரணமாக தொழிலாளர்கள் மாதம் 21 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் இந்த திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இந்த திட்டம் மூலம் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்களும் தற்போது மருத்துவம் பார்க்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக பணம் தேவைப்படும். இதை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு தொழிலாளர்களின் மாத சம்பளம் 21 ஆயிரத்தில் இருந்து உயர்த்தி 30 ஆயிரம் வரை வாங்குபவர்களும் இஎஸ்ஐ திட்டத்தில் பயன் பெறலாம் என்ற உத்தரவை பிறப்பித்தால் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று தொழிலாளர்கள் இடையில் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் செயல்படுகிறது. தொழிலாளர்களின் பிரச்னையை முன்னிறுத்தி போராட்டம் பல நடத்துகிறார்கள். தொழிலாளர்களின் மாத சம்பளம் 21 ஆயிரத்தில் இருந்து உயர்த்தி 30 ஆயிரம் வரை வாங்குபவர்களும் இஎஸ்ஐ திட்டத்தில் பயன் பெறலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

The post மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் வாங்கும் தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் பயன்பெற முடியாமல் தவிப்பு: தொழிற்சங்கங்கள் ஆதரவு கரம் நீட்டுமா? appeared first on Dinakaran.

Related Stories: