இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி நிலக்கரி சுரங்கம்: என்எல்சியில் 6,000 நிரந்தர பணியிடங்கள் காலி

 

இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி நிலக்கரி சுரங்கமான என்எல்சியில் 6 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது, இங்கு 50% வடமாநிலத்தவர்கள் பணியாற்றுவதால் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
இந்தியாவிலேயே மிகப்பெரிய திறந்தவெளியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம். கடந்த 60 ஆண்டுகளாக இங்கு பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் 1934ம் ஆண்டுதான் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கூட, 1828ம் ஆண்டே பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வுகள் தொடங்கி விட்டன. 1828ல் நெய்வேலி அருகே நிலக்கரி வகையைச் சேர்ந்த ‘பீட்’ என்ற நிலக்கரி படிவம் இருப்பதாக அப்போதைய சென்னை மாகாண அரசுக்கு, அப்போதைய தஞ்சாவூர் (நெய்வேலி அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது) கலெக்டர் நெல்சன் தெரிவித்தார்.

1935ம் ஆண்டு நெய்வேலியில் உள்ள ஜம்புலிங்க முதலியார் என்பவருடைய வீட்டிலுள்ள பெரிய கிணற்றில் போர் போட்டபோது, கருப்பு நிறத்தில் வந்த பொருட்கள்தான் பழுப்பு நிலக்கரி என்பது ஆய்வில் உறுதியானது. 1952ம் ஆண்டு உயர்மட்ட குழு ஒன்று குவாரிகளை அமைத்து, 1953ம் ஆண்டு சென்னை மாகாண அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் கிருஷ்ணராவ் தலைமையில் குவாரி தோண்டும் திட்டம் தொடங்கியது. 1955ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் மாநில அரசின் கையிலிருந்து ஒன்றிய அரசுக்கு மாறியது. 1956ம் ஆண்டு நெய்வேலி அனல் மின் நிலையம் முழுமையான உற்பத்தி நிறுவனமாக மாறியது. தனது மின்உற்பத்தியையும் தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் தென் மாநிலங்களின் மின் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் பழுப்பு நிலக்கரி அபரிமிதமான அளவில் கிடைக்கிறது.

என்எல்சியில் உற்பத்தி தொடங்கியதும், ஐடிஐ, டிப்ளமோ முடித்த தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 1980ல் 23 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 7 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றினர். கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது நிரந்தர தொழிலாளர்கள் 7,100 பேரும், இன்கோசர்வ் சொசைட்டி மூலம் 6,500 தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்கள் (AMC/NON AMC/ BMC/OMC/SHORT TIME) என 9600 பேரும் பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகள், பொறியாளர்கள்(AE, EE, DEPT CHIEF ENG., DEPT GM) என 3,342 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 40% முதல் 50% பேர் வட இந்தியர்களாக உள்ளனர். டிப்ளமோ படித்துவிட்டு பணியில் சேர்ந்தவர்கள் 375 பேர். இதிலும் 40 சதவீதம் பேர் வட இந்தியர்கள். ஒப்பந்த பணியாளர்கள் பணியிலும் தற்போது வடஇந்தியர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 6 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளன. 2026ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு ஆயிரம் தொழிலாளர்கள் வீதம், 4,030 பேர் நிரந்தர தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தம் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இக்காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப ஒன்றிய அரசை மாநில அரசு நிர்பந்தம் செய்ய வேண்டும். அதற்காக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பொதுமக்களும், என்எல்சி தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

* இன்கோசர்வ் சொசைட்டி என்றால் என்ன?

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் மற்றும் என்எல்சி பணியில் இருந்து உயிரிழந்தவர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளராக நீண்ட காலமாக பணியாற்றியவர்கள் இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி விட்டு 45, 50 வயதுக்கு மேல்தான் நிரந்தரம் செய்யப்படுவார்கள். காரணம் நிரந்தர தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்றபின் தான் இவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும்.

* நேரடி நியமனத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள்

கடந்த ஆண்டு 221 பொறியாளர் பதவிக்கு நடந்த போட்டி தேர்வில் 8 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் தேர்ச்சி அடைந்தனர். இது தமிழக பொறியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கடந்த மாதம் நடந்த ‘லேட்டர் என்ட்ரி’ (நேரடி நியமனம்) மூலம் எந்தவித தேர்வும் இல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 226 பேரை நியமித்து உள்ளனர். இதற்காக ஒவ்வொரிடமும் ‘ப’ வைட்டமின் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நியமனத்திலும் 60 சதவீதம் பேர் வட இந்தியர்கள். 40 சதவீதம் ேபர் மட்டுமே தமிழகத்ைத சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

* ஆட்கள் பற்றாக்குறைவால் பல்வேறு பணிகள் முடக்கம்

முன்னாள் தொமுச தலைவர் வீர.ராமசந்திரன் கூறுகையில், ‘இயந்திரங்கள் பராமரிப்பு, சுரங்கம், துப்புரவு பணிகள் சரிவர நடக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த காலங்களில் அனல்மின் நிலையங்கள் வருடத்துக்கு ஒருமுறை 15 நாள் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு அனைத்து தொழிலாளர்களும் பராமரிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தற்போது ஓரிரு நாட்கள் மட்டும் பெயரளவுக்கு செய்கின்றனர். இதனால் தான் விபத்து ஏற்படுகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, இயந்திர பராமரிப்பு பணிகள், சுத்தப்படுத்தும் பணிகள், பயிற்சி பெற்ற ஐடிஐ படித்த தொழிலாளர்கள் இல்லாதது, SME/operaterகள் பணி நியமனம் செய்யாமல் கான்ட்ராக்டர் மூலம் வேலை வழங்குவது என்பது ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைக்கு உறுதியளிப்பதாக உள்ளது’ என்றார்.

* புதிய நியமனத்தில் விளையாடும் துட்டு

புதிதாக ஒப்பந்த தொழிலாளர்கள் எடுக்கும் விவகாரத்தில் 50 சதவீதம் பேரை அதிகாரிகள் நியமிக்கின்றனர். இதற்காக ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வாங்கி கொள்வதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் பேரை ஒப்பந்த நிறுவனங்களே பணியில் அமர்த்துகின்றன. 20 சதவீதம் பேர் தொழிற்சங்கங்கள் மூலம் பணியில் சேருகின்றனர். இதில் பல வகையில் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் தொழிலாளர்கள் சேர்க்கப்படுவதாக தொமுச நிர்வாகி ஒருவர் கூறினார்.

* கண்துடைப்பு பதவி உயர்வு

இன்கோசர்வ் சொசைட்டியில் பல ஆண்டு காலமாக பணியாற்றிவர்களை கடந்த 2021ம் ஆண்டில் 519 பேரும், கடந்த ஆண்டில் 750 பேரும் நிரந்தர பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 50 வயதை நெருங்கும் தொழிலாளர்கள் ஆவர். இதுவரை இவர்கள் w/0(wage/0) பிரிவிலேயே அதாவது இன்கோசர்வ் சொசைட்டில் பணியாற்றிய ஊதியத்திலேயே பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களுக்கு 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகுதான், w/1 பிரிவுக்கு மாற்றப்படும்போது நிரந்த ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும். அதுவரை இன்கோசர்வ் சொசைட்டியில் வழங்கப்படும் சம்பளமே வழங்குவது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிலர் நிரந்தர தொழிலாளர்களாக 2 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பணி ஓய்வு பெறுபவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* 600 ஏக்கர் வழங்கிய குடும்பத்துக்கு 10 ஆண்டாக பணி வழங்காத என்எல்சி

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை அறிந்த ஜம்புலிங்க முதலியார், தனக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை அப்போதைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரிடம் வழங்கினார். ஜம்புலிங்க முதலியாரின் மகள் வழி பேரனான அமரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அக்குடும்பத்தினர் நலிவடைந்த நிலையில் உள்ளனர். என்எல்சி நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கினால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக பேரன் அமரன், பேத்தி ரஞ்சனி மற்றும் கொள்ளுப்பேரன் ராம் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. இதற்கு என்எல்சி நிர்வாகமும் வேலை தருவதாக இசைவு தெரிவித்து 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணி வழங்கவில்லை.

* வேலை இல்லாமல் அலையும் நேரத்தில் இவ்வளவு காலியிடம்

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் சுமார் 13 லட்சம் கோடி சொத்துகளை ஒன்றிய அரசு தனியாருக்கு தாரைவார்த்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதேபோல், ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகம் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்து வரும் நிலையில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 6,000 பணியிடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி நிலக்கரி சுரங்கம்: என்எல்சியில் 6,000 நிரந்தர பணியிடங்கள் காலி appeared first on Dinakaran.

Related Stories: