இனப்பெருக்க காலம் எதிரொலி வடநெம்மேலி பாம்பு பண்ணை மூடல்: அதிகாரிகள் தகவல்

சென்னை: இனப்பெருக்கம் காலம் என்பதால் வடநெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதம் மூடப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையொட்டி முதலைப் பண்ணை உள்ளது. இந்த, முதலைப் பண்ணை வளாகத்திற்குள் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த, சங்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், தமிழக அரசிடம் அனுமதி பெற்று ஆண்டுதோறும் பாம்புகளை பிடித்து இப்பண்ணைக்கு வழங்குகின்றனர். குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பாம்புகளை பிடிக்கின்றனர். மேலும், பிடித்து வந்த பாம்புகளை மண்பானையில் அடைத்து வைத்து, பின்னர் ஒவ்வொரு பாம்பிலிருந்தும் விஷம் எடுக்கப்படுகிறது.

அப்படி, எடுக்கப்படும் விஷம் அங்குள்ள ஆய்வகத்தில் பவுடராக்கி, அதனை மும்பை, பூனே, ஐதராபாத் பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து, ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கேன்சர், புற்றுநோய், ரத்த கசிவு நிற்க, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பாம்பு, பிடித்து வந்து கொடுக்கும் இருளர்களுக்கு நல்ல பாம்புக்கு ரூ. 2300, கண்ணாடி வீரியன் ரூ. 2300, கட்டு வீரியன் ரூ. 850, சுருட்டை வீரியனுக்கு ரூ. 300 என பணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் பாம்புகள் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த, மாதங்களில் பாம்புகளை பிடிக்க இருளர்களுக்கு அனுமதி இல்லை. இதனால், வடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

The post இனப்பெருக்க காலம் எதிரொலி வடநெம்மேலி பாம்பு பண்ணை மூடல்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: