மற்றவர்கள் மீது சேறு வாரி பூச அண்ணாமலைக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில், ஏப்.26: தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெங்களூருவில் கண்ணியமில்லாத வகையில் அரசியல் நடத்தியதால் அந்த அரசு தூக்கி வீசப்படும் நிலையில் உள்ளது. அண்ணாமலை அங்கு சென்று வேலையை பார்க்கட்டும். பாஜவின் யோக்கியம் அனைத்து மக்களுக்கும் தெரியும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை நாம் நியாயப்படுத்த முடியுமா? ஜிஎஸ்டி வரி விதிப்பை நியாயப்படுத்த முடியுமா? பாரபட்சமான ஆட்சி முறை ஒன்றியத்தில் உள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவு ஜிஎஸ்டி செலுத்துகிறோம். 9 ரூபாய் ஒன்றிய அரசிடம் நிதி கொடுத்தால் அவர்கள் மானியமாக வருவதை பார்த்தால் 1.5 சதவீதம் தான் வருகிறது. அனைத்திலும் ஒரு சார்பு தன்மையுடன் இருந்து வரும் கட்சியின் பிரதிநிதி இவ்வாறு பேசக்கூடாது.

இன்கம்டாக்ஸ் ஒரு துறை, அவர்கள் தொழில் நடத்துகின்றவர்களிடம் சோதனை நடத்தப்படுவது என்பது எப்போதும் நடைபெற்று வருகின்ற ஒன்று ஆகும். தமிழகத்தின் அரசை, நமது தலைவரை அவர்கள் ஒரு சவாலாக பார்க்கிறார்கள். அவர்களை பாசிசம், நாசிசம் என்று சொல்லி வருகின்ற நேரத்தில் சோஷலிசம், சமூக நீதி பற்றி பேசுகின்ற முக்கியமான தலைவராக அவர் இருந்து வருகிறார். தென் மாநிலங்களில் அவரது மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. உ.பி.யில் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை, போலீஸ் எஸ்கார்ட் உடன் வருபவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தை நாட்டு மக்கள் பார்த்து உறைந்து போயுள்ளனர்.

அவர்கள் கண்ணியத்தை பற்றிய பேசலாமா? கிரிப்டோ கரன்சி, சைபர் க்ரைம் தொடர்பாக ஒன்றிய அரசுதான் ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதற்கான அதிகாரம் அவர்களிடம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சைபர் செக்யூரிட்டியில் எங்களுக்கான அதிகார வரம்புக்கு உட்பட்டு இணைய வழி பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கொள்கை திட்டம் வகுப்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதனை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை யாரும் குறிவைக்க முடியாது. இந்திய துணை கண்டத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் கொள்கை ரீதியாக தெளிவாக அரசியலையும், அரசையும் முன்னெடுத்து செல்லும் தலைவராக அவர் உள்ளார். திமுகவின் கொள்கையான சமூக நீதியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தலைவர் அறைகூவல் விடுத்து சென்று வருகிறார். இது பாசிசம் பேசுகின்றவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசியலில் தெனாவெட்டு பேசுவது சகஜமான விஷயம். அண்ணாமலைக்கு மற்றவர்கள் மீது சேறு வாரி பூச யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. ஒருவரை கை நீட்டி பேசும்போது ஒரு விரல் அவர்களை பார்க்கும்போது மூன்று விரல் தன்னை பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு பேசுவதற்கு தகுதியான இடத்தில் அவர் இல்லை, அவர் தகுதியானவரும் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெள்ள பாதிப்பை தடுக்க ₹70 கோடி நிதி
அமைச்சர் மனோதங்கராஜ் மேலும் கூறியது: குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் மாநில அளவில் நாம் முதலிடத்தில் உள்ளோம். பல ஆண்டுகாலமாக மலையோர பகுதி மக்கள், ஆதி திராவிடர் மக்களுக்கு பட்டா வழங்குதல் நிலுவையில் இருந்த நிலையில் அவற்றை சீர் செய்து பட்டா வழங்கியுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை, மீன்துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கேட்டு பெற்று சரியான முறையில் அவற்றை செயல்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாதது என்று ஏதும் இல்லை. மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு துறையும் கடந்த காலங்களைவிட பல மடங்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலைகள் சீரமைப்புக்கு தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.15 கோடி நிதி பெற்றுள்ளோம். அதனை போன்று சாலை பணிகளுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. பொதுப்பணித்துறை சார்பில் அதனை சீர் செய்ய இரண்டு, மூன்று கட்டமாக அதற்கான திட்டம் தயாரித்து அளித்துள்ளோம். அண்மையில் ரூ.70 கோடி நிதி கிடைத்து அதன் வாயிலாக பணிகள் நடைபெற்று வருகிறது.குமரி மாவட்டத்தில் நீராதாரங்களுக்கான தேவை என்பது மிகவும் அதிகம். இப்போது நீப்பாசன துறை அமைச்சர் மாவட்டத்திற்கு வருகை தந்து இதற்கு தனியாக திட்டம் தீட்டுவதாக கூறியுள்ளார். குறிப்பாக நெய்யாறு இடதுகரை கால்வாய், பட்டணங்கால்வாய், பேச்சிப்பாறை அணையில் இருந்து வருகின்ற முதன்மை சானல் போன்றவற்றிற்கு ஆக்கபூர்வ பணிகள் மேற்கொள்ளப்படும்.

The post மற்றவர்கள் மீது சேறு வாரி பூச அண்ணாமலைக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: