கலாஷேத்ராவில் பாலியல் தொந்தரவு விவகாரம் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு மாணவிகளிடம் விசாரணையை தொடங்கியது

சென்னை: திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் பலர், பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் என 4 பேர், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். பின்னர் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கடந்த மாதம் 28ம் தேதி புகார் அளித்த மாணவிகளிடம் பொது வெளியில் விசாரணை நடத்தினர். பிறகு அவர் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்ததாக கூறி, பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த மாதம் 29ம் தேதி கல்லூரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பிறகு மாநில மகளிர் ஆணையம் தலைவர் குமாரி, போராட்டம் நடத்திய மாணவிகள் மற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள், முன்னாள் மாணவிகளிடம் கடந்த மாதம் 31ம் தேதி நேரில் விசாரணை நடத்தினர். பிறகு தனது அறிக்கையை குமாரி தமிழக அரசிடம் அளித்தார். அதில், மாணவிகளின் குற்றச்சாட்டின் படி பேரசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வாயிலாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்திருந்தார்.இதற்கிடையே மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளின் பாலியல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 11ம் தேதி மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி மகேஸ்வரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் குமார், சுந்தரேசன், பெண் இன்ஸ்பெக்டர் என 6 பேர் கொண்டு குழு கல்லூரிக்கு சென்று இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ் உள்ளிட்ட 6 பேரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய விசாரணை குழு ஒன்று அமைத்தது. இந்த விசாரணை குழு ஏற்கனவே புகார் அளித்த மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இருந்தாலும், கல்லூரி நிர்வாகம் அமைத்த விசாரணை குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு நேற்று கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.அப்போது பேராசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர், எங்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. குற்றவாளிகளை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றி வருகிறது என்று விசாரணை குழுவினரிடம் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.

அப்போது, புகார்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு மாணவிகளிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், புகார் அளித்த மாணவிகளுக்கு ஆதரவாகவும், அதேபோல் போராட்டம் நடத்திய மாணவிகளுக்கு ஆதரவாக இருந்த பெண் பேராசிரியைகளுக்கு கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் பல வகையில் நெருக்கடி காடுத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதை கல்லூரி நிர்வாகம் உடனே நிறுத்த வேண்டும் என்று விசாரணை குழுவினரிடம் மாணவிகள் கேட்டுக்கொண்டனர்.

*ஜாமீன் மனு தள்ளுபடி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கலாஷேத்ராவில் பாலியல் தொந்தரவு விவகாரம் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு மாணவிகளிடம் விசாரணையை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: