ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய தேசிய தொழில்நுட்ப மையம்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார்

சென்னை: தையூர் ஐஐடி வளாகத்தில் ரூ.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட, புதிய தேசிய தொழில்நுட்ப மையத்தை ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார். சென்னை ஐ.ஐ.டி.யின் தேசிய தொழில்நுட்ப மைய வளாகத்துக்கு கேளம்பாக்கம் அடுத்த தையூரில் 163 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ், ரூ.77 கோடியில், தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் சிமுலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தையூர் வளாகத்தில் நடந்தது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தலைமை வகித்தார். இதை தொடர்ந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும், சிமுலேட்டரை இயக்கி வைத்தும் ஒன்றிய கப்பல் போக்குவரத்துக் கழகம், துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசியதாவது:

சென்னை ஐ.ஐ.டி.யில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் 77 கோடி ரூபாய் செலவில், ஆய்வு மையம் மற்றும் சிமுலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கப்பல் போக்குவரத்து, அகழ்வாராய்ச்சி, துறைமுகம் மற்றும் கரையோரப் பொறியியல் திட்டம் செயல்படுத்தப்படும். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தையூரில் தொடங்கப்பட்டுள்ள தேசிய தொழில்நுட்ப மையம் 5 அதிநவீன ஆய்வகங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து, கடல் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, இ நேவிகேஷன் போன்ற துறைகள் பெரும் பயன்பெறும். இந்த மையத்தின் மூலம் கடல்சார் கண்டுபிடிப்பு மையம் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன்பெறும். நாட்டின் வர்த்தகத்தில் 70% கடல் வழி போக்குவரத்தின் மூலமே நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் பேசினர்.

* சிறந்த மாநிலம் தமிழ்நாடு
ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசும்போது, ‘‘வணக்கம் எப்படி இருக்கீங்க.. நலமா.. என்று தமிழில் கேட்டார். தமிழ் மிகச்சிறந்த மொழி. இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மாநிலம் சிறந்து விளங்குவதாகவும், ஜி.டி.பி. வளர்ச்சியில் தமிழ்நாடு மாநிலத்தின் பங்கு 2வது இடத்தில் உள்ளது என அவர் பாராட்டினார்.

The post ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய தேசிய தொழில்நுட்ப மையம்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: