கோடை காலத்தில் அதிகரிக்கும் கண் பிரச்னைகள்: பாதுகாக்கும் வழிமுறைகள்; மருத்துவர் ஆலோசனை

தாம்பரம்: தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்பான ஒன்று. குறிப்பாக கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல்வேறு உபாதைகள் உண்டாகும். குறிப்பாக, பலருக்கு கண் நோய், கண்ணில் எரிச்சல், கண்ணில் நீர் வருவது, கண் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். கோடை கால கண் பிரச்னைகளை பராமரிக்க சில வழிமுறைகள் உள்ளது. இந்த கண் பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றினால் கண் சம்பந்தமான பிரச்னைகளை தவிர்க்கலாம். கோடை காலத்தில் ஏற்படும் கண் பிரச்னைகள், உலர் கண் நோய், சூடான மற்றும் வறண்ட வானிலை காரணமாக கண்ணீர் ஆவியாதல் வீதத்தை அதிகரிக்கிறது. இது நிலையற்ற கண்ணீர் படலத்திற்கு வழிவகுக்கிறது.

நீண்ட நேரம் கணினி அல்லது மொபைல் திரைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து கண் சிமிட்டாமல் இருப்பது, நீச்சல் குளத்தில் இருந்து குளோரின் வெளிப்பாடு, காற்றில் உள்ள தூசித் துகள்கள், சூடான வெளிப்புற காற்று மற்றும் ஏசி சூழல் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. உலர் கண் நோய் பொதுவாக கண்களில் தண்ணீர் கொட்டுதல், எரிச்சல், இடைவிடாத மங்கலான பார்வை, கண்கள் லேசான சிவத்தல் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

வறண்ட கண் நோய்களில் நீர் வடிதல் ஏற்படலாம். இதை தடுக்க வறட்சிக்கான காரணத்திற்கு சிகிச்சையளிப்பது முக்கியம். கண் ஒவ்வாமை, வானிலை மாற்றம் பொதுவாக குளிர்காலத்திலும், கோடை காலத்திலும் அனைத்து வகையான ஒவ்வாமைகளையும் மோசமாக்குகிறது. வெப்பநிலை மாற்றம், தூசி மற்றும் துகள்கள் அல்லாத மாசுபாட்டின் காரணமாக இந்த ஒவ்வாமை எதிர்விளைவுகளில் சில நம் கண்களையும் பாதிக்கின்றன. ஒவ்வாமை கண் நிலைகள் பொதுவாக சிவத்தல், அரிப்பு, எரிச்சல், கண்களில் எரியும் உணர்வு போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.

சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்களால் பாதுகாப்பற்ற வெளிப்பாடு, கடுமையான சூரிய ஒளி தோல் மற்றும் கண்களுக்கு யூவி வெளிப்பாட்டை அதிகரிக்கிறது. நீடித்த புற ஊதா கதிர்வீச்சு ஒளி-கெராடிடிஸ் மற்றும் போட்டோ-மெட்ராஸ் ஐ போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும். புற ஊதா கதிரின் நீண்டகால வெளிப்பாடு முன்தோல் சுறுக்கம் போன்ற பல்வேறு கண் நோய்களில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது கண்புரை மற்றும் கண் இமை புற்றுநோய்களை உருவாக்கும்.
மெட்ராஸ் ஐ, வெண்படல அழற்சி, பிங்க் கண் என்றும் அழைக்கப்படுகிறது. இது வைரஸ் அல்லது பாக்டீரியாவால் கண்ணின் வெள்ளைப் பகுதியின் அழற்சி ஆகும். இதேபோல், மெட்ராஸ் ஐ அதிகரிப்பு பொதுவாக கோடை காலத்தில் காணப்படுகிறது.

இது குத்துதல் உணர்வு, கண்களை ஒட்டும், நீர் வடிதல் மற்றும் கண்கள் சிவப்பாக காணப்படும். மெட்ராஸ் ஐ தொடர்பு அல்லது கைக்குட்டை போன்ற பொருட்களை பாதிக்கப்பட்ட நபருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பரவலாம். ஸ்டை என்பது கண் இமைகளின் வெளிப்புற விளிம்பில் சிவப்பு, வலிமிகுந்த வீக்கம் ஏற்படும். இது பொதுவாக கண் இமைகளில் இருக்கும் சுரப்பிகளின் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்து கண்களை பராமரிக்க கண் பராமரிப்பு கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணிய வேண்டும். அவை கண்ணீர் படலத்தின் ஆவியாவதை தடுக்கவும், உலர் கண்கள் மற்றும் ஒவ்வாமை கண் நோய்களின் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.

எனவே, கோடை விடுமுறையில் குழந்தைகள் வெளியில் அதிகளவில் விளையாடுவதால், இந்த கண் நோய்களைத் தடுக்க அடிக்கடி கைகளையும் முகத்தையும் கழுவுவது அவசியம். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மீள நாம் நீச்சல் குளத்திற்கு சென்று குளிப்பது வழக்கம். இந்த நீச்சல் குள நீரில் அதிக அளவு குளோரின் உள்ளது. அவ்வாறு குளிக்கும் போது பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தி குளோரின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து நம் கண்களைப் பாதுகாப்பது முக்கியம். அதோடு கண்களை லூப்ரிகேட்டாக வைத்திருப்பது கண் வறட்சி மற்றும் கண் எரிச்சலை போக்க உதவும். வறண்ட கண் அறிகுறிகளைக் கொண்டவர்கள் கண் நிபுணரை அணுக வேண்டும்.

இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ரீஜனல் மெடிக்கல் டைரக்டர் டாக்டர் சீனிவாசன் ராவ் கூறுகையில், ‘இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளது. இதிலிருந்து நம்மையும் நம் கண்களில் ஏற்படும் பிரச்னைகளையும் பாதுகாத்துக் கொள்ள நாம் வெளியே செல்லும்போது பெரிய தொப்பி ஒன்றை அணிந்து செல்வது முக்கியமானது. அதேபோல யூவி ரேஸ் ப்ரொடக்டர் கண்ணாடி அணிந்து செல்வதும் முக்கியமானது. மேலும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் சாதாரணமாகவே கண் நோய்கள், மெட்ராஸ் ஐ போன்றவை எளிதாக வரக்கூடியவை, எனவே கண்ணாடி அணிவது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது அவசியம். அதிகப்படியான வெப்பத்தினால் கண்களில் சூடு கட்டி வருவது வழக்கம், எனவே எண்ணெயில் பொறித்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல வெளியில் செல்பவர்கள் கண்ணை கைகளால் தேய்த்துக் கொள்வது, அழுக்கான துணிகளில் கண்களை துடைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த சமயங்களில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் அதிக நேரம் கணினி உபயோகிப்பவர்கள், இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு கண்களில் வறட்சி அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் கண் மருத்துவர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனைப்படி ஐ டிராப்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. அதிகப்படியான வறட்சி, எரிச்சல், கண் உறுத்தல் இருப்பது போல் உணர்ந்தால் சில நிமிடங்களுக்கு கண்களில் ஐஸ் பேக் வைத்து ஓய்வெடுத்தால் அது கண்ணிற்கு குளிர்ச்சி தரும்,’’ என்றார்.

* டீ, காபி தவிர்க்கலாம்
நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை நிழலில் நின்று தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்து சிறிது ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் பயணத்தை துவங்குவது நல்லது. காபி, டீ, கூல்ட்ரிங்க்ஸ் போன்றவற்றை தவித்துவிட்டு பழங்களினால் ஆன ஜூஸ், இளநீர் போன்றவற்றை அருந்துவது நல்லது. அதேபோல ஒரு நாளுக்கு சுமார் 4 முறையாவது கண்களை தண்ணீரால் கழுவுவது நல்லது.

* நீர்ச்சத்து உணவு அவசியம்
இளநீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்னையை சமாளிக்கலாம். காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரை வள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவற்றை கோடை காலத்தில் பயன்படுத்துவது நல்லது. இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோடை காலத்தில் கண்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

* நச்சுகளை அகற்றும் தண்ணீர்
நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடிப்பது நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளை பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரை குடிப்பது நல்லது. உடனடியாக தயாரிக்கப்படும் பழச்சாறுகளான தர்பூசணி, திராட்சை, பழங்களின் சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்தலாம்.

The post கோடை காலத்தில் அதிகரிக்கும் கண் பிரச்னைகள்: பாதுகாக்கும் வழிமுறைகள்; மருத்துவர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: