நவீன கேமரா வசதி கொண்ட செல்போன்களின் வருகையால் அழிவை நோக்கி செல்லும் போட்டோ ஸ்டுடியோ தொழில்: வேலையின்றி தவிக்கும் போட்டோகிராபர்ஸ்

நாகரிக வளர்ச்சியின் காரணமாக ஒரு தொழில் புதிதாக வளர்கிறது என்றால் அதனைச் சார்ந்த மற்றொரு தொழில் அழிகிறது என அர்த்தம். அந்த வகையில் பல தொழில்கள் இன்று நாகரிக வளர்ச்சியின் காரணமாக முற்றிலுமாக அழிந்து விட்டன. சில தொழில்கள் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. சில தொழில்கள் வருங்காலத்தில் அழியும் நிலையில் உள்ளன.

அந்த வகையில் அழிவுப் பாதையை நோக்கி செல்லும் தொழில்களில் நாம் அனைவராலும் ஒரு காலத்தில் வியப்பாக பார்க்கப்பட்ட போட்டோ ஸ்டுடியோ தொழிலும் ஒன்று. வீட்டில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் பெரிய பெரிய பைகளோடு மண்டபத்திற்கு முதல் ஆளாக ஸ்டுடியோ கேமரா மேன்கள் வந்து நிற்பார்கள். அந்த வகையில் மக்களின் நல்லது கெட்டது என அனைத்து சம்பவங்களிலும் போட்டோகிராபர்களுக்கும் ஒரு பங்கு உண்டு.

அப்படிப்பட்ட இந்த ஸ்டுடியோ கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தால், ஸ்டுடியோ என்ற சொல் இத்தாலிய மொழியில் இருந்து பெறப்பட்டுள்ளது. 1840ம் ஆண்டுகளில் ஹென்றிபாக்ஸ் டால்போட் மற்றும் லூயிஸ் டாகுரே ஆகியோரால் கேமராவால் படங்களை பதிவு செய்வதற்கான செய்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆரம்ப கால புகைப்பட ஸ்டுடியோக்கள் உருவாக்கப்பட்டன என சான்றுகள் உள்ளது.

ஸ்டுடியோ தொழில்நுட்பத்தை பொறுத்தவரை 1964ம் ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் அதிக அளவில் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் புதிய செயற்கை ஒளி மூலமாக படங்களை எடுக்க ஆரம்பித்தனர். ஆனால் இது மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்பட்டதால் பெரும்பாலானோர் இதை விரும்பவில்லை. புகைப்படம் எடுப்பதில் உள்ள பல்வேறு தடைகளை சமாளிக்க அந்த காலத்தில் ஸ்டுடியோக்களை அமைக்கும் போது பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதற்கு விளக்குகள் ஒரு பெரிய தடையாக இருந்தது. இதற்கு ஒரு தீர்வாக பிளாஷ் இருந்தது. இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்டுடியோ தொழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சி அடைந்து அதிநவீன கேமராக்களின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது போட்டோ எடுத்த அடுத்த நொடியில் படம் வெளியே வந்து விழும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

ஒரு காலகட்டத்தில் ரோல் போட்டு போட்டோக்களை எடுத்து அதனைக் கழுவி, சரி செய்து அதன் பின்பு உரியவர்களிடம் ஸ்டுடியோக்காரர்கள் ஒப்படைத்து வந்தனர். அந்த காலகட்டத்தில் செல்போன்களின் பயன்பாடு கிடையாது. இதனால் போட்டோ எடுப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக செல்போன் பயன்பாடு வர ஆரம்பித்த பிறகு தங்களுக்கு பிடித்தமான போட்டோக்களை மக்கள் தாங்களே எடுக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு செல்போன்களின் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வர ஆரம்பித்த பிறகு தாங்களாகவே அனைவரும் கேமராமேன் போன்று செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

இதன் விளைவாக சின்னச்சின்ன நிகழ்ச்சிகளுக்கு ஸ்டுடியோவிற்குச் சென்று கேமராமேன்களை அழைப்பதை பொதுமக்கள் தவிர்க்கத் தொடங்கினர். கல்யாணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஸ்டுடியோவுக்குச் சென்று போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபரை தற்போது அழைக்கின்றனர். மற்றபடி காது குத்து, நிச்சயதார்த்தம், பிறந்தநாள் பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி தாங்களாகவே போட்டோக்களை எடுத்துக் கொள்கின்றனர். அதன் பின்பு அதனை லேப் எனப்படும் பிரின்ட் போடும் இடத்திற்கு தாங்களாகவே எடுத்துச் சென்று வேண்டிய படங்களை மட்டும் குறைவான செலவில் பிரின்ட் போட்டு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஸ்டுடியோ போட்டோகிராபர்கள் வந்து போட்டோ எடுக்கும்போது ஒரு ரோல் இவ்வளவு. ஒரு செக்சனுக்கு இவ்வளவு என கறாராக கூறுவார்கள். ஆனால் தற்போது தாங்கள் எடுக்கும் போட்டோக்களில் எந்த போட்டோ வேண்டும், எந்த போட்டோ வேண்டாம் என்பதை பார்த்து அதனை மட்டும் பிரின்ட் போட்டு கொண்டு பணத்தை பொதுமக்கள் மிச்சப்படுத்துகின்றனர். ஒரு காலகட்டத்தில் ஒரு ஸ்டுடியோக்குள் சென்றால் ஒரு வரவேற்பாளர், ஒரு போட்டோகிராபர், ஒரு வீடியோகிராபர் என குறைந்தது 3 பேர் இருப்பார்கள். மேலும் ஒரு டிசைனர் அவ்வப்போது வந்து செல்வார். ஆனால் தற்போது ஒரு ஸ்டுடியோவில் ஒரு நபர் மட்டுமே இருக்கிறார். ஆர்டர் வந்தால் மட்டுமே அவர்கள் மற்றவர்களை அழைத்துச் செல்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் மட்டும் வந்தால் போதும் எனக் கூறி அதற்கு ஏற்றார் போல் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்து விடுகின்றனர். மற்ற நாட்களில் அவர்கள் வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுகின்றனர்.

இதுகுறித்து, எம்கேபி நகர் பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வரும் அப்பு டிஜிட்டல் ஸ்டுடியோவின் உரிமையாளர் அப்பு கூறியதாவது: கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கடையில் 3 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 3 பேருக்கு சம்பளம் கொடுத்து, கடை வாடகையையும் கட்டி ஓரளவுக்கு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது கடையை எனது மனைவி பார்த்துக் கொள்கிறார். நான் ஆர்டர் வந்தால் போட்டோ எடுக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்று விடுகிறேன். கடையில் சம்பளம் கொடுத்து வேலையாட்களை வைக்கும் அளவிற்கு இன்று ஸ்டுடியோ தொழில் இல்லை.

சென்னையில் ஒரு காலகட்டத்தில் இருந்த ஸ்டுடியோக்களின் எண்ணிக்கையை விட தற்போது ஸ்டுடியோக்களின் எண்ணிக்கை கூடியிருந்தாலும், அவைகளை நிரந்தரமாக நடத்த முடியாமல் அடிக்கடி மூடு விழாவும் நடக்கிறது. 1998 – 99 காலகட்டத்தில் ஒரு ரோல் 500 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டிருந்தோம். இதில் அனைத்து செலவுகளும் போக 250 ரூபாய் லாபம் கிடைத்தது. இன்று ஒரு ரோல் 3000 ரூபாய்க்கு எடுக்கின்றோம்.

ஆனால் போதிய லாபம் வருவதில்லை. கடை வாடகை, கரன்ட் பில், போட்டோகிராபர் கூலி உள்ளிட்டவை மிக அதிகமாக உள்ளது. அந்த காலகட்டத்தில் ஒரு ரோலில் 35 படங்கள் மட்டுமே எடுக்க முடியும். நன்கு விஷயம் தெரிந்த போட்டோகிராபர்கள் மட்டுமே போட்டோ எடுத்தனர். இதனால் ஒரு படத்தை ஒரு முறை மட்டுமே எடுப்பார்கள். இரண்டாவது முறை எடுத்தால் ரோல் வீணாகிவிடும் என்ற நிலை இருந்தது.

இதனால் போட்டோகிராபர்களை தவிர வேறு யாரும் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் மெமரி கார்டு வைத்து படம் எடுப்பதால் ஒரு படத்தை மூன்று அல்லது நான்கு முறை எடுக்கின்றனர். ஏதாவது ஒரு இடத்தில் அந்த படம் சரியாக வந்துவிடும். இதனால் போட்டோகிராபர்கள் இல்லாமல் கேமரா வைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்டோ எடுக்கலாம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது.

மேலும் படம் தவறாக வந்தாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை ஓரளவுக்கு சரியாக காட்டி விடுகின்றனர். இதனால் கேமரா வைத்திருக்கும் அனைவரும் போட்டோகிராபர் என்ற நிலை தற்போது வந்துவிட்டது. 15 வருடத்திற்கு முன்பு ஒரு ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்து 2 ஆண்டுகள் போட்டோகிராபருக்கு அசிஸ்டெண்டாக வேலை செய்தால் மட்டுமே அவர் கேமராவை தொட முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது ஒரு கேமராவை வாங்கி வந்துவிட்டால் அவர் போட்டோகிராபர் ஆகிவிடுகிறார். இதனால் போட்டோகிராபர்களுக்கு இருந்த மரியாதை தற்போது இல்லை.

பலரும் ஆர்வக்கோளாறில் கேமரா வாங்கிக் கொண்டு உடனடியாக ஸ்டுடியோவை திறந்து விடுகின்றனர். இதில் உள்ள சிக்கல்களை உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும். அதன் பின்பு கடை வாடகை கட்ட முடியாமல் விரைவில் ஸ்டுடியோவை மூடிவிட்டு கேமராவை வைத்துக்கொண்டு பார்ட் டைமாக வேலைக்குச் செல்கின்றனர். இவ்வாறு பல பிரச்னைகளை நோக்கி தற்போது ஸ்டுடியோ தொழில் சென்று கொண்டிருக்கிறது,’’ என்றார்.

* கடைசி பந்தி

எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைத்தையும் முடித்துவிட்டு கடைசியாக போட்டோகிராபர்கள் சாப்பிடச் செல்வார்கள். இறுதியில் அவர்களுக்கு சாப்பாடு, குழம்பு மட்டுமே கிடைக்கும். பொரியல், ஸ்வீட் என எதுவும் இருக்காது. அப்படி இருந்தும் தொழில் மீதுள்ள மரியாதை காரணமாக அவர்கள் அதனை பெரிதாக காட்டிக் கொண்டது கிடையாது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான போட்டோகிராபர்கள் பந்தியில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டனர்.

* நாகரீகம் இல்லை

அந்த காலகட்டத்தில் போட்டோ எடுக்கும்போது ஒரு நாகரீகம் இருந்தது. பெண் மற்றும் மாப்பிள்ளையை அருகருகே நிற்க வைத்து நாகரிகமான முறையில் போட்டோ எடுத்தார்கள். ஆனால் இப்போது கட்டி அணைப்பது, உதட்டில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை காட்சிகள் போன்ற பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுக்கச் சொல்கின்றனர். இதனால் தற்போது போட்டோகிராபர் தொழிலுக்கு ஒரு நாகரீகமே இல்லாமல் போய்விட்டது என போட்டோகிராபர்கள் வருந்துகின்றனர்.

* இஎம்ஐ கட்ட முடியாத நிலை

அனைவரும் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டு எந்தெந்த போட்டோ தேவையோ அதை மட்டும் எங்களிடம் கொடுத்து இதை மட்டும் பிரின்ட் போட்டுக் கொடுங்கள் என தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் நேரடியாக லேப்களுக்கு சென்று அவர்களாகவே பிரின்ட் போட்டுக் கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் ரூ.2 லட்சம் ரூ.3 லட்சம் என கேமராக்களை வாங்கி வைத்துக்கொண்டு போட்டோகிராபர்கள் இஎம்ஐ கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

The post நவீன கேமரா வசதி கொண்ட செல்போன்களின் வருகையால் அழிவை நோக்கி செல்லும் போட்டோ ஸ்டுடியோ தொழில்: வேலையின்றி தவிக்கும் போட்டோகிராபர்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: