கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறப்பு சார்தாம் யாத்திரை தொடங்கியது

டேராடூன்: கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டு, புகழ் பெற்ற சார்தாம் யாத்திரை நேற்று தொடங்கியது. உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் இந்து பக்தர்கள் சார்தாம் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரைக்கு 16 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சார்தாம் யாத்திரை அறிமுக நிகழ்ச்சி ரிஷிகேசில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று நண்பகல் 12.35 மணிக்கு கங்கோத்ரி கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. கங்கோத்ரி கோயில் திறப்பின் சம்பிரதாய நிகழ்ச்சிகளில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டார். இதேபோல், 12.41 மணிக்கு யமுனோத்ரி கோயில் கதவுகள் திறக்கப்பட்டது. யமுனா தேவி சிலை அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது கார்சாலியில் உள்ள யமுனா நதிக்கரையின் மீது ஹெலிகாப்டரிலிருந்து ரோஜா இதழ்களை நதியில் மழையாக பொழிந்தனர். யாத்திரைக்கு வந்திருந்த பக்தர்களை வரவேற்ற முதல்வர் தாமி, யாத்திரை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார். கேதார்நாத் கோயில் ஏப்ரல் 25ம் தேதியும், பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 27ம் தேதியும் திறக்கப்பட உள்ளது.

The post கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறப்பு சார்தாம் யாத்திரை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: