திருவொற்றியூரில் வடிவேலு பாணியில் பூங்காவை காணவில்லை என பேனர் வைத்ததால் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் நடிகர் வடிவேலு பாணியில் பூங்காவை காணவில்லை என வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது எல்லை அம்மன் கோயில் அருகே கேசவன் பூங்கா என்ற சிறுவர் பூங்கா இருந்தது. இந்த பூங்காவில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உப கரணங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் படிப்பதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு பூச்செடிகளும் இருந்தன. ஆனால் பூங்கா சரிவர பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து நாளடைவில் பூங்காவிற்கு பொதுமக்களின் வருகை குறைந்தது. இதனால் பூங்காவை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வடிவேலு பாணியில் கேசவன் பூங்காவை காணவில்லை, கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்ற பேனரை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் உள்ள அவரது இடத்தில் வைத்துள்ளார். இந்த பேனரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மைதன்மை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அப்புறப்படுத்தினர்.

The post திருவொற்றியூரில் வடிவேலு பாணியில் பூங்காவை காணவில்லை என பேனர் வைத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: