9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்: கோவாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பார்

டெல்லி: இந்தியாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தங்கள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மே 26, 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லிக்கு சென்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு வந்த கடைசி மூத்த பாகிஸ்தான் தலைவர் ஆவார். அதன்பின்னர் இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய அளவில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, 2021 அக்டோபரில் இந்தியா ஏற்றது.

இந்தாண்டு கோவாவில் மே மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு பங்கேற்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா தெரிவித்துள்ளார். மாநாட்டில் பங்கேற்க வருமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அரசுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதையேற்று பாகிஸ்தான் குழு பங்கேற்க உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

The post 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்: கோவாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பார் appeared first on Dinakaran.

Related Stories: