பாலக்காடு,ஏப்.21: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே கல்லடிக்கோடு மீன்வல்லம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ரப்பர் தோட்டத் தொழிலாளி படுகாயம் அடைந்தார். பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா கல்லடிக்கோட்டை அடுத்த மீன்வல்லத்தைச் சேர்ந்தவர் சஞ்சு (38). ரப்பர் தோட்டத்தொழிலாளி. நேற்று முன்தினம் சஞ்சு உள்பட 20 பேர் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது காட்டு யானை ஒன்று சஞ்சு அருகே வந்து விரட்டியுள்ளது. இதனால் சஞ்சு தப்பித்து ஓடும் போது கீழே விழுந்துள்ளார். கிழே விழுந்தவரை காட்டுயானை தாக்கி காயப்படுத்தியது.
மேலும், தாக்க முயன்ற போது தொழிலாளர்கள் கூச்சலிடவே, யானை பின்வாங்கி காட்டுயானைகள் கூட்டத்தில் புகுந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்த சக நண்பர்கள் சஞ்சுவை மீட்டு வட்டம்பலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல், சிகிச்சைக்காக பெரிந்தல்மன்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மன்னார்க்காடு வனத்துறை காவலர்கள் விரைந்து வந்து மீன்வல்லம் பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதை ஆய்வு செய்து அவற்றை வனத்திற்குள் விரட்டுவதற்காக பட்டாசு வெடித்தும், டிரம் சவுண்ட் அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
The post காட்டு யானை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம் appeared first on Dinakaran.