மலப்புரம் அருகே சம்பரவட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலக்காடு, அக்.26: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சம்பரவட்டம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சுற்றுப்புற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கேரளாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை காரணமாக பட்டாம்பி, பாரதப்புழா, குந்திப்புழா, பாலக்காடு யாக்கரை, கல்பாத்தி, கொடும்பு, திருவாலத்தூர், சித்தூர்-தத்தமங்கலம், கொல்லங்கோடு, ஆலத்தூர், வடக்கஞ்சேரி ஆகிய அனைத்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளியாங்கல், திருநாவாயா, திரூர், சம்பரவட்டம், பொன்னாணி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளில் மீன்ப்பிடிக்க செல்ல வேண்டாம் என உள்ளாட்சி அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா, வாளையார், போத்துண்டி, மங்கலம், சுள்ளியாறு, மீன்கரை, பம்பிக்குளம் மற்றும் சிறுவாணி ஆகிய அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பாலக்காடு, கல்பாத்தி, பரளி, மங்கரை, ஒத்தப்பாலம் ஆகிய இடங்களில் வசிக்கின்ற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்டம் நிர்வாகம் விடுத்துள்ளது.

The post மலப்புரம் அருகே சம்பரவட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: