புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமான பணி ஆய்வு

குன்னூர், அக்.26: நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இட வசதிகள் மற்றும் பார்க்கிங் வசதி இல்லாததால் நீதிமன்றம் வரும் மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும், அங்கு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டு வருகிறது.இதனால், புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி சேஷாசாய் தலைமையில் பந்துமை, ஆரக்கொம்பை, பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை போன்ற பகுதிகளில் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், தற்போது 8 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துடன், நீதிபதி குடியிருப்பு கட்டுவதற்கு ஏதுவாக குன்னூர் – கோத்தகிரி சாலையில் உள்ள பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணையை நேற்று நீதித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் நீதிமன்றம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் சங்கீதா, வட்டாச்சியர் கனிசுந்தரம், குன்னூர் வழக்கறிஞர்கள், வனசரகர் இரவீந்திரநாத், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமான பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: