பாட்ட வயலில் இருந்து காலையில் இயக்கப்படும் அரசு பேருந்தை உரிய நேரத்தில் இயக்க கோரிக்கை

 

கூடலூர்,ஏப்.21: கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்து ஒன்று தமிழக எல்லை பாட்டவயலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு கூடலூர் நோக்கி வருகிறது. பிதர்காடு, நெலாக்கோட்டை, தேவர் சோலை, பாடந்துறை வழியாக இந்தப் பேருந்து கூடலூர் வரும் வழியில் 30-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த வழியில் ஏராளமான பயணிகள் இப்பேருந்தைக்கு கூடலூர் வருவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாட்டவயல், பிதர்காடு, நெலாக்கோட்டை, தேவர்சோலை, பாடந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து தபால் நிலையங்களில் தினசரி தபால் பைகள் இப்ப பேருந்தில் எடுத்து வரப்பட்டு கூடலூர் தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டும் வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் இந்த பேருந்து இவ்வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. 19ம் தேதி ஒருநாள் இயக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இப்பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் இப்பேருந்தை நம்பி பயணிக்கும் பயணிகள் தனியார் வாகனங்களிலும் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்தும் பயணித்து வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளும் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், பேருந்துகளை சரியான நேரத்தில் தடையின்றி இயக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

The post பாட்ட வயலில் இருந்து காலையில் இயக்கப்படும் அரசு பேருந்தை உரிய நேரத்தில் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: