உச்சி வெயில் மண்டைய பொளக்குதுங்க…! கட்டுமான பணிக்கு வரும் தொழிலாளர் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்தது

சேலம்: கடும் வெயிலால் எளிதில் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால் கட்டுமான பணிக்கு வரும் தொழிலாளர்களின் வருகை 50 சதவீதம் வரை சரிந்துள்ளதாக இன்ஜினியர்கள் ெதரிவித்தனர். தமிழகத்தில் விவசாயம், ஜவுளி தொழிலுக்கு அடுத்தபடியாக கட்டுமான தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான தொழிலை நம்பி செங்கல் சூளை, எம்.சாண்ட் கிரசர், கருங்கல் ஜல்லி கிரசர், சிமெண்ட் தொழிற்சாலை, பிவிசி பைப் கம்பெனி, எலக்டரிக் ஒயர், சுவிட்ச் கம்பெனிகள், டைல்ஸ் கம்பெனி, மரக்கடைகள், பெயிண்ட் கடைகள் என ஏராளமான தொழில்கள் உள்ளன. கட்டுமான ெதாழில் சரிந்தால் அதனை சார்ந்த அத்தனை தொழிலும் கடும் சரிவை சந்திக்கும். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. மொத்தமாக தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 31ம் தேதி வரை கட்டுமான பணியில் எவ்வித தொய்வு இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் கட்டுமான பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவதால் பலர் கட்டுமான பணிக்கு வருவதை குறைத்துக் கொண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிக்கு குறைந்தளவே தொழிலாளர்கள் வருவதாக இன்ஜினியர்கள் தெரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த இன்ஜினியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கட்டுமான தொழிலை நம்பி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதை சார்ந்த உப தொழிலில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இன்ஜினியர்கள் பணியாற்றி வருகின்றனர். கட்டுமான பணியை பொறுத்தமட்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுறுசுறுப்பாக இயங்கும். ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் நீடிக்கும். செப்டம்பர், அக்டோபரில் கடும் மழை இருக்கும். இந்த காலக்கட்டங்களில் வழக்கமாக நடக்கும் பணியில் 50 சதவீதம் சரியும். நடப்பு மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 105 முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் நீடிக்கிறது. இதனால் கடும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எளிதில் உடல்சோர்வு ஏற்படுகிறது. மேலும் வீட்டின் மாடியில் பணி செய்ய தொழிலாளர்கள் தயங்குகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கட்டுமான பணிக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை சரிந்துள்ளது.

மேலும் வெயில் காரணமாக புதியதாக கட்டுமான பணிகள் தொடங்கவும் மக்கள் தயங்கி வருகின்றனர். தற்போது வீட்டின் உள்ளே சுவர் பூசுதல், பிளம்பிங் ஒர்க், எலக்ட்ரிக்கல் ஒர்க், டைல்ஸ் ஒட்டுவது, கதவு, ஜன்னல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே தொழிலாளர்கள் வருகின்றனர். கட்டுமான பணி குறைந்ததால் இத்தொழிலை சார்ந்த சிமெண்ட், எம்.சாண்ட், கருங்கல் ஜல்லி, இரும்பு கிரீல், எலக்ட்ரிக் பொருட்கள், பிவிசி பைப், பெயிண்ட், டைல்ஸ், மரக்கட்டைகளின் விற்பனையும் குறைந்துள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள இன்ஜினியர்களுக்கும் போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. மே மாதம் அக்னி நட்சத்திரம் முடியும் வரை இதேநிலைதான் இருக்கும். வெயிலின் தாக்கம் குறைந்தால் மீண்டும் தொழிலாளர்களும் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள். இவ்வாறு இன்ஜினியர்கள் கூறினர்.

The post உச்சி வெயில் மண்டைய பொளக்குதுங்க…! கட்டுமான பணிக்கு வரும் தொழிலாளர் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: