அகில இந்திய அளவில்வரி செலுத்துவதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளதுவருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பேட்டி

நாகர்கோவில், ஏப்.20: அகில இந்திய அளவில் வரி செலுத்துவதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு – புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தெரிவித்தார். நாகர்கோவிலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தனியாரிடம் இருந்து இடம் வாங்கப்பட்டு புதிய கட்டிடம் ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் (வருமான வரி மற்றும் வருவாய்) சங்கீதா சிங் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தமிழ்நாடு- புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி, மதுரை வருமானவரி தலைமை ஆணையர் சீமாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் சந்தனா ராமச்சந்திரன் வரவேற்றார். நெல்லை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு நன்றி கூறினார். டிடிஎஸ் பிரிவின் தலைமை ஆணையர் ரத்தினசாமி உட்பட வருமான வரித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் வருமான வரித்துறைக்கு புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர், ஈரோடு,திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் புதிய கட்டிடங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் சிறந்த பெரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் அலுவலக பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் 12 பேர் வசிக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட பட்ஜெட் என்பது 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி, நாம் இலக்கை எட்டியது 1 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி ஆகும். 67 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வரி செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் அதிகமாக உள்ளது. அகில இந்திய அளவில் 10 முதல் 12 சதவீதம் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் 74 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரி செலுத்துகின்றனர். அகில இந்திய அளவில் வரி செலுத்துவதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு வருகிறது. 70 லட்சம் பேர் ரிட்டன் பைல் செய்கின்றனர், வரியும் கட்டுகின்றனர். டிடிஎஸ் நிறைய பேர் செலுத்துகின்றனர். டிடிஎஸ் வளர்ச்சி இந்த ஆண்டு 28 சதவீதம் வந்துள்ளது.

வருமான வரி செலுத்துவதில் எளிமைப்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. நிறைய பேர் தானாகவே முன்வந்து வரி செலுத்துகின்றனர். அவர்களுக்கு ரீபண்ட் என்பதும் சீக்கிரமாகவே வந்துவிடுகிறது. 3 மணி நேரம், 4 மணி நேரத்தில் பைல் செய்யப்பட்டு வந்துவிடுகிறது, அதில் பிரச்னை இல்லை. இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் 40 சதவீதம் ரீபண்ட் கொடுத்துள்ளோம். புதிய வருமான வரி விதிப்பு முறை, வருமான வரி செலுத்துகின்றவர்களுக்கு நல்லது. பலரும் அதனை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர். வருமான வரித்துறை அலுவலக வளாகம் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தோட்டங்கள், சோலைகள் அமைத்தல் போன்றவற்றையும் மேற்கொள்கிறோம். குறுங்காடுகள் வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளையும் செய்கின்றோம். மக்கள் தங்களால் முடிந்த அளவு தங்களின் அருகாமையில் மரங்களை நட்டு நாட்டில் பசுமை புரட்சியை உருவாக்க வேண்டும். இருக்கின்ற இடங்களை முடிந்த அளவு பசுமையாக வைத்திருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இருந்து ₹230 கோடி வரி

வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி மேலும் கூறியது: நாகர்கோவில் மண்டலம் வருவாயில் சிறந்து விளங்குகிறது. நாகர்கோவிலில் ரூ.230 கோடி வரி வருகிறது. வருடா வருடம் வளர்ச்சி என்பது தமிழ்நாடு அளவில் 23 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் நாகர்கோவிலின் வளர்ச்சி என்பது 35 சதவீதம் ஆக உள்ளது. தமிழ்நாடு வளர்ச்சியிலேயே இது மிக அதிகமாக உள்ளது. வருமானமும் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் வரி செலுத்துகின்றனர். வருமான வரி கட்டுகின்றவர்களின் சேவைக்காக இங்கு சேவை மையம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இந்தகட்டிடத்தில் முதல் முதலாக நாங்கள் அளிக்கின்ற சேவை என்பது இந்த பகுதியில் உள்ள மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டாம், இங்கேயே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பான் கார்டு பிரச்னைகள், கணக்கிடுவதில் உள்ள பிரச்னைகள், ரிட்டன் வருவதில் உள்ள சிரமங்கள் தொடர்பாக அணுகி தீர்வு காணலாம்.

நீதிமன்றம் வாயிலாக தண்டனை

வருமான வரி கட்டாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நாங்கள் பல்வேறு விதங்களில் தகவல்களை திரட்டி அதன் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம். 40, 50 சோர்ஸ் வழியாக அதற்கான தகவல்கள் திரட்டப்படுகிறது. வங்கிகள், பொது பங்கு வெளியீடுகள் வாயிலாகவும் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. வருமான வரி கட்டாதவர்களுக்கு அபராதம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 7 வழக்குகளில் வரி செலுத்தாதவர்களுக்கு கடந்த ஆண்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ரிட்டன் பைல் செய்யாதவர்கள் கண்டறிப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் இதுவரை ஒருவருக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று ரவிச்சந்திரன் ராமசாமி கூறினார்.

The post அகில இந்திய அளவில்

வரி செலுத்துவதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது

வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பேட்டி
appeared first on Dinakaran.

Related Stories: