பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல் வரிபாக்கியை வசூலிக்க மீண்டும் சமாதான திட்டம்

சென்னை: சட்டசபையில் வணிகவரியில் நிலுவையில் உள்ள வரிபாக்கியை வசூலிக்க சமாதான திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கவன ஈர்ப்பு கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த காலங்களில் 6 முறை சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டு வரவு செலவு திட்ட உரையில் அறிவிக்கப்பட்டு சமாதான திட்டம் செயல்படுத்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். எனவே, மீண்டும் சமாதான திட்டம் கொண்டு வரப்படுமா என்றார்.

வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி: சமாதான திட்டம் என்பது முதல்வர் கருணாநிதி சிந்தனையில் உதித்த சீரிய திட்டமாகும். வணிகவரித் துறையில் நிலுவையில் உள்ள வரி நிலுவைகளை செலுத்தி, தீர்ப்பதற்கு வணிகர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் பொருட்டு ஒரு முறைத் தீர்வு திட்டமான சமாதானத் திட்டம் முதன் முதலாக கருணாநிதியால் 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னர் 2002, 2006, 2008, 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சமாதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் வணிகர்களின் நீண்ட கால வரி நிலுவைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. கவர்னர் கடந்த ஆண்டு 10.5.2022 அன்று கோப்பிற்கு ஒப்புதல் வழங்கினார். அன்றைய தினம் 2022-2023ம் நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால் அந்த சட்ட மசோதாவை பேரவையில் அறிமுகம் செய்ய இயலவில்லை. தற்போது நிதித் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு பின்னர், அந்த கோப்பு முதல்வர் மற்றும் கவர்னர் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், தமிழ்நாடு வணிக வரிகள் (நிலுவைகள் தீர்ப்பு) சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு சமாதான திட்டம் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல் வரிபாக்கியை வசூலிக்க மீண்டும் சமாதான திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: