கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

திருப்புத்தூர், ஏப்.17: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் இன்று மாலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறுகிறது. திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்.2ல் முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. ஏப்.9ல் 1ம் திருநாளன்று மாலையில் உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தினந்தோறும் அம்மன் வெள்ளி ரிஷப, அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் நடந்தது. 6ம் திருநாளன்று அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 7ம் திருநாளான நேற்று முன்னதினம் அம்மன் புஸ்ப பல்லாக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். 8ம் திருநாளான நேற்று இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

9ம் திருநாளான இன்று காலையில் முத்துமாரியம்மன் தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான நாளை மாலை உற்சவம்பாள் கீரணிப்பட்டியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தங்குடிக்கு திரும்ப எழுந்தருளல் நடைபெறும்.

The post கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: