பாஜவில் இருந்து விலகுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடாகாவில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. குமாரசாமியின் ஜேடிஎஸ், காங்கிரஸ், பாஜ ஆகியவை ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. வேட்பாளர்கள் விவகாரத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் போல் இல்லாமல் பாஜவில் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. பாஜவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த் எம்எல்ஏக்கள் பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் பாஜவில் இருந்து வெளியேறி உள்ளனர்.

சீட் வழங்கப்படாதவர்களில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டரும் ஒருவர். இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தொடர் வெற்றியை பெற்றுள்ள அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியடைந்தார். இதையடுத்து பாஜ தலைமை அறிவுறுத்தலின்படி ஷெட்டரை சமாதானப்படுத்த ஹூப்ளியில் உள்ள அவரின் வீட்டுக்கு மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக பாஜ தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் சென்றனர். அவர்கள், ஷெட்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பலனளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து ஷெட்டர், நிருபர்களிடம் கூறியதாவது:

நான் அவமானப்படுத்தப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. எனவே பாஜவில் இருந்தும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலக உள்ளேன். சிர்சியில் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளேன். தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்’ என்றார். முன்னதாக தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதன் தாக்கம் 20 முதல் 25 தொகுதிகளில் எதிரொலிக்கும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷெட்டர் வந்தால் வரவேற்போம்; சித்தராமையா

பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பாஜ கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பா.ஜவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த அவரது நிலைமை தற்போது என்ன ஆகியிருக்கிறது. ஈஸ்வரப்பாவின் இந்த நிலைமையை பார்த்தாலே பாஜவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. பாஜவின் முதல் மற்றும் 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்பு நிறைய தலைவர்கள் சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், பெலகாவியில் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. பெலகாவியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அந்த கட்சிக்குள் மோதல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

The post பாஜவில் இருந்து விலகுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர் appeared first on Dinakaran.

Related Stories: