5,000 பேரை கொன்றதாக ஒப்புக் கொண்ட விவகாரத்தில் தனக்கு எதிரான ரிட் மனுக்களை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் நேபாள பிரதமர் பிரசண்டா கோரிக்கை

காத்மண்டு: 5 ஆயிரம் பேரை கொன்றதாக தார்மீக பொறுப்பேற்ற பிறகு தனக்கு எதிரான ரிட் மனுக்களை ரத்து செய்ய வேண்டும் என நேபாள பிரதமர் பிரசண்டா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 2020 ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நேபாளத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போரில் 17 ஆயிரம் பேர் பலியானதற்கு நான்தான் காரணம் என குற்றம்சாட்டப்படுவதில் உண்மை இல்லை. ஆனால், மாவோயிஸ்ட் கட்சி தலைவராக கிளர்ச்சியின் போது 5 ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு நான் தார்மீக பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

5 ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு தானே காரணம் என ஒப்புக்கொண்ட பிரதமர் பிரசண்டாவிடம் விசாரணை நடத்த கோரியும், அவரை கைது செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் ஞானேந்திர ஆரன், கல்யாண் புதபோகி ஆகியோர் நேபாள உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி பிரசண்டாவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பிரசண்டா உச்ச நீதிமன்றத்துக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள 13 பக்க பதில் கடிதத்தில், “மக்கள் கிளர்ச்சியின்போது ஏற்பட்ட அனைத்து உயிரிழப்புகளுக்கும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நோக்கில் என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதை மறுத்து உண்மையை கூறவே 5,000 பேரின் உயிரிழப்புக்கு நானே காரணம் என தார்மீகமாக பொறுப்பேற்று கொண்டேன். இதனை கருத்தில் கொண்டு எனக்கு எதிரான ரிட் மனுக்களை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post 5,000 பேரை கொன்றதாக ஒப்புக் கொண்ட விவகாரத்தில் தனக்கு எதிரான ரிட் மனுக்களை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் நேபாள பிரதமர் பிரசண்டா கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: