குறைந்தளவு ஆல்கஹால் உள்ளது என்ற தவறான எண்ணம் கோடை காலத்தில் அதிகரிக்கும் பீர் விற்பனை: அளவை மீறினால் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை

‘ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணு, இல்லாட்டி மனிதனுக்கு சக்தி இல்லை. தாய்ப்பாலும் போதை தரும், சாராயம் போதை தரும் இரண்டையும் பிரித்தறிய புத்தி இல்லை’ எனும் சினிமா பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனுக்கு ஏதாவது ஒரு போதை தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள் பல்வேறு போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதில் முக்கியமானது பீர் எனப்படும் ஒரு வகையான மதுபானம். ஒரு காலகட்டத்தில் பீர் என்பது ஆல்கஹால் கிடையாது என சிலரால் விளம்பரப்படுத்தப்பட்டது. சினிமாக்களிலும் சாதாரணமாக வீடுகளில் உள்ளவர்கள் பீர் அருந்தும் காட்சிகளை வைத்தனர். இதனால், இளைஞர்கள் சரக்கு குடித்தால்தான் தவறு, பீர் அடித்தால் தவறில்லை என சொல்லும் வகையில் நினைத்து பீர் பழக்கத்துக்கு அடிமையாகினர்.

அதன் விளைவால் கல்யாணம், காதுகுத்து உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும், அதில் பீர் வகைகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என முடிவுசெய்து பல பார்ட்டிகளில் பீர் வகைகளை பரிமாற செய்தனர். பீர் என்ற மதுபானப் பொருளுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. உலகில் தண்ணீர், தேநீர் இதற்கு அடுத்தபடியாக அதிகமாக உட்கொள்ளப்படும் திரவப் பொருட்களில் பீர் ஒன்று என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கோதுமை, சோளம், அரிசி மற்றும் சில தானியப் பொருட்களை நன்றாக கொதிகலன்களில் கொதிக்க வைத்து, நன்கு பதப்படுத்தி இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் சுவைக்காக ஓப் பூக்கள் எனப்படும் பூக்களில் இருந்தும் இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற வகையில் பீர் வகைகளும், அதன் சுவைகளும் மாறுபடும். பீர் தயாரிக்கப்படும் இடத்தில் எடுக்கப்படும் தண்ணீரின் சுவையைப் பொறுத்து சில இடங்களில் பீரின் சுவை அமைகிறது. மேலும் அதில் சேர்க்கப்படும் தானியங்கள் மற்றும் மூலப்பொருட்களின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒவ்வொரு சுவை என பல சுவைகளில் பீர் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பீர்களில் ஆல்கஹால் அளவு மாறுபடுகிறது. ஒரு சதவீதத்திலிருந்து 20% அளவு வரை பீர்களில் ஆல்கஹால் அளவு உள்ளது. நம் ஊரில் கிடைக்கும் பீர்களில் பொதுவாக 4 சதவீதத்திலிருந்து 7% வரை ஆல்கஹால் அளவு உள்ளது. பீர் வகைகளை முதன்முதலில் யார் கண்டுபிடித்தார் என்பதற்கு தெளிவான வரையறைகள் கிடையாது.

சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் வாழ்ந்த எகிப்தியர்கள் இதை உருவாக்கியிருக்கலாம் என சில குறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த நாட்டிலிருந்து பீர் குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பீர் கலாச்சாரம் பரவி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, நல்ல விஷயம் மனிதர்களை சென்றடைய கால தாமதமாகும். ஆனால் தீய விஷயங்கள் உடனடியாக மனிதர்களைச் சென்று அடைந்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு விதமான பிராண்டுகளில் பீர்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், பீர் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பீர் வகைகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுவாக 7 நிறுவனங்களிடமிருந்து பீர் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதில் 5 நிறுவனங்கள் அதிகமான அளவில் பீர்களை விற்பனை செய்து வருகின்றன. சாதாரணமான நாட்களில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகும். தற்போது கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால், தினசரி ஒரு லட்சம் பெட்டிகளாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்தில் பீர் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வழங்கி வருகின்றன. தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் நாகரிக வளர்ச்சியின் காரணமாக பெண்களும் பீர் வகைகளை பருகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் சொகுசு பார்களுக்கு பெண்கள் அதிகளவில் வருவதையும், அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பீர்களை குடிப்பதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

பீர் உடம்புக்கு நல்லது, உடல் சூட்டைத் தணிக்கும் என ஒரு சில அதிபுத்திசாலிகள் கூறி வருகின்றனர். அதிலும் ஒருபடி மேலே போய், பீர் குளிர்பான வகையைச் சார்ந்தது, அது போதைப்பொருள் கிடையாது எனவும் சிலர் கூறி வருகின்றனர். பீர் குடித்தால் உடலுக்கு நல்லது, அது உடல் உஷ்ணத்தைத் தணித்து, சிறுநீரக கற்கள் வராமல் பார்த்துக் கொள்ளும், பீர் அருந்துவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வராது, மன அழுத்தத்தை போக்குகிறது என பல இணையதளங்களில் தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் சிலர். ஆனால் உண்மையில் பீர் குடித்தால் என்ன நடக்கும் என பெரம்பூர் சென் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘வெயில் காலங்களில் அதிகமான அளவு பீர் போன்ற மதுபான வகைகளை எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள ஆல்கஹால் அளவு உடலில் கலந்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது.

மேலும் மிகவும் குளிர்ச்சியாக அதனை பருகுவதால் தொண்டையில் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் உஷ்ணத்தை தணிக்க பீர் அருந்துகிறோம் என கூறுபவர்கள், அதற்கு மாற்றாக இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய இளநீர், சுத்தமான பதநீர், பழ வகைகளை சாப்பிடலாம். மேலும் பீர் அருந்தும்போது அதிகப்படியான சைடிஷ் எனப்படும் பொறித்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் கொழுப்புச்சத்து அதிகரித்து தொப்பை, உடல் பருமன் ஏற்படுகிறது.

எந்த ஒரு பொருளையுமே அளவோடு எடுத்துக் கொண்டால் அதில் பாதிப்பு கிடையாது. ஆல்கஹால் சம்பந்தப்பட்ட மதுபானங்களோடு ஒப்பிடுகையில், பீரில் ஆல்கஹால் அளவு குறைவு என்பதால், அதனை அளவோடு எடுத்துக் கொண்டால் பெரிய பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.ஆனால் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே இயற்கையான முறையில் கிடைக்கும் பானங்களை பருகி, கோடையில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் விடுபட வேண்டும்,’’ என்றார்.

  • கூலிங்காக கிடைக்க கூடுதலாக ரூ.20

    பொதுவாக பீர் வகைகள் நல்ல கூலிங்காக இருந்தால்தான் குடிக்க நன்றாக இருக்கும். தற்போது அரசு மதுபானக் கடைகளில் 40 பீர்களை ப்ரீசரில் அடுக்கிவைத்தால் அது அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் மீண்டும் பாட்டில்களை அடுக்கும்போது அது கூலிங் ஆவதற்கு காலதாமதம் ஆகும். ஆனால் குடிமக்கள் அடுத்தடுத்து வந்து பீரை வாங்குவதால் கூலிங்காக தர முடிவதில்லை என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

சில கடைகளில் தனியாக ப்ரிட்ஜ் வைத்து பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை குடிமக்களிடம் வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கூலிங்காக பீர் கிடைப்பது ஒரு சிக்கல், அப்படியே கிடைத்தாலும் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக குடிமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

  • உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்

    புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘மற்ற மதுபானங்களில் அதிகளவு ஆல்கஹால் உள்ளது என்றும், பீர் வகைகளில் குறைந்தளவு ஆல்கஹால் உள்ளது என்றும் ஒரு தவறான எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. இது ஓட்டல் சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடுவதற்கு சமம். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட பீர் வகைகளுக்கும், தற்போது தயார் செய்யப்படும் பீர் வகைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

அவசர கதியில் சரியான பார்முலாவை பின்பற்றாமல் பீர் வகைகளை தயாரிக்கின்றனர். இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். மேலும் பீர்களில் உள்ள ரசாயனங்கள் ரத்தக்குழாய்களில் படிந்துவிட்டால் பல ஆண்டுகள் மருத்துவம் செய்து அதனை தீர்க்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தற்போது நம் ஊர்களில் விற்கப்படும் பீர்களை அதிகமாக எடுத்துக் கொண்டால் பிரச்னைகள் கண்டிப்பாக உண்டு,’’ என்றார்.

*பொதுவாக பீர் வகைகளை உற்பத்தி செய்தபின் 12 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் வடிகட்டி பாட்டிலில் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். ஒரு பாட்டிலில் 650 மில்லி என பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது வெயில் காலம் என்பதால் அதிகப்படியான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

12 முதல் 14 நாட்கள் நன்றாக ஊற வைத்தால்தான் பீரின் முழு சுவை தெரிய வரும். ஆனால் சில நிறுவனங்கள் பீர் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுவதால், அவசரகதியில் இரண்டு மூன்று நாட்களுக்குள் தயார் செய்து அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் பீரின் சுவை மாறுபட்டு, குடிமக்கள் அதை விரும்பாமல் ஒரு பிராண்டில் இருந்து வேறு பிராண்டுக்கு மாறுகின்றனர்.

The post குறைந்தளவு ஆல்கஹால் உள்ளது என்ற தவறான எண்ணம் கோடை காலத்தில் அதிகரிக்கும் பீர் விற்பனை: அளவை மீறினால் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: