துறையூர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு மையம், துணை அஞ்சலகம்: மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

துறையூர், ஏப். 11: துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தில் சமரசத் தீர்வு மையத்தையும், துணை அஞ்சலகத்தையும் திருச்சி மாவட்ட நீதிபதி பாபு நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு துறையூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மணிகண்டராஜா, துறையூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ஜெய்சங்கர், துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி சத்தியமூர்த்தி, ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு கலந்து கொண்டு சமரசத் தீர்வு மையத்தையும், துணை அஞ்சலகத்தையும் தொடக்கி வைத்து பேசியதாவது:

கிராமத்தினரிடம் வாக்கு சுத்தம் உள்ளது. ஆகையால் தாலுக்கா அளவில் சமரசத் தீர்வு மையங்களை திறக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். துறையூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க உரிய பரிந்துரை செய்யப்படும் என்றார். முன்னதாக பேசிய திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமார், துறையூர் நகருக்கு தனி காவல் நிலையமும், துறையூர் கிராமங்களுக்கு தனியாக காவல் நிலையமும் அமைக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார். நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், ராமசாமி, ரத்தினம் உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்ச்சியில் துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், அரசு வழக்கறிஞர்கள் ,சபாபதி ,ஜெயராஜ், வழக்கறிஞர் சங்க துணை தலைவர் டி.வி. செந்தில்குமார் ,பொருளாளர் முகமது ரபிக், வழக்கறிஞர்கள் முத்துக்குமார், அத்தியப்பன், வழக்காடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்ட சமரசத் தீர்வு மையத்தில் ஒரு தம்பதியருக்கிடையே சமரசம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் இருவரும் சேர்த்து வைக்கப்பட்டனர். இறுதியில் துறையூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் கோகிலா நன்றி கூறினார்.

The post துறையூர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு மையம், துணை அஞ்சலகம்: மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: